» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலர வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!

சனி 3, ஜனவரி 2026 12:53:48 PM (IST)

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலர வேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியில் வந்துவிட்டோம். மத்திய உள்துறை மந்திரியிடம், தமிழக அரசியல் களத்தின் நிலவரத்தை தெரிவித்திருக்கிறேன். அதிமுகவில் பிரிந்து கிடக்கிற சக்திகள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் வளர்த்தெடுத்த இயக்கம் சிதறுண்டு போகக்கூடாது.

கழக சட்ட விதிகளை கேள்விக்குறியாக்கி இருக்கிறார்கள். கழகத்தின் பொதுச்செயலாளரை, அடிப்படை தொண்டர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் சட்டவிதி. இந்த விதியை மாற்றியுள்ளார்கள். அடிப்படை உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் கழகத்தின் பொதுச்செயலாளராக போட்டியிடலாம் என்ற சட்டவிதி இன்று மாற்றப்பட்டுள்ளது.

கழக சட்ட விதியை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று சட்டப்போராட்டம் நடத்தி சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றிருக்கிறோம். சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கு, இரட்டை இலை விவகாரம் உள்ளிட்ட 6 வழக்குகளை சென்னை ஐகோர்ட்டுக்கு அனுப்பியது. அந்த வழக்குகள் எல்லாம் உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உரிமையியல் நீதிமன்றத்தில் வழங்கும் தீர்ப்பே இறுதியாக இருக்கும்.

எம்ஜிஆரின் புகழை யாராலும் மறைக்க முடியாது. பல கட்சிகள் அவரது புகழை மறைப்பதற்கு முயன்று தோற்றுப் போயிருக்கிறார்கள். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Thoothukudi Business Directory