» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிக்கப்படவில்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி!
வியாழன் 20, நவம்பர் 2025 4:52:06 PM (IST)
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிக்கப்படவில்லை. அதில் சில விளக்கங்கள் கேட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதிபட தெரிவித்தார்.
திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 14 சதவீதம், பாலியல் குற்றங்கள் 53 சதவீதம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 60 சதவீதம் அதிகரித்துள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 18,200 பாலியல் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இது கடந்த ஆட்சியைவிட 17 சதவிகிதம் அதிகமாகும்.இந்தியாவிலேயே தற்கொலை முயற்சி அதிகம் நடைபெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தற்கொலைகளின் தலைநகராக மாறியிருக்கிறது. சொத்து வரி, மின் கட்டணம் உயர்ந்துள்ளது. திருநெல்வேலி மாநகரப் பகுதி முழுவதும் பெரும்பாலான சாலைகள் பாதாள சாக்கடை பணிக்காக சேதப்படுத்தப்பட்டு அலங்கோலமாக காட்சியளிக்கிறது. கட்டிடங்கள் கட்டும் அனுமதிக்காக, ஒரு சதுர அடிக்கு ரூ.600 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இவை எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மக்கள் தெளிவாக உள்ளனர். ஆனால், உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்று பயபக்தியுடன் கூட்டணியை நடத்துவதில் திமுகவினர் தெளிவாக உள்ளனர். பிரதமர் மோடி கோவையில் கலந்துகொண்ட விவசாயிகள் மாநாட்டில் ரூ.18 ஆயிரம் கோடியை விவசாயிகளுக்கு வழங்கியிருந்தார். ஆனால் அவர் மீது குறை கூறி வருகின்றனர்.
மெட்ரோ ரயில் திட்டதத்தை நிராகரித்துவிட்டதாக மக்களை மடைமாற்றம் செய்ய ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். ஆனால் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிக்கப்படவில்லை. அதில் சில விளக்கங்கள் கேட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மெட்ரோ ரெயில் திட்டத்தை கோவை பகுதிக்கு கொண்டு வரக் கூடாது என்ற நோக்கத்துடன் அந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.
கோவை மாவட்டத்தில் அதிகளவில் அதிமுக, பாஜகவினர் இருப்பதால் இந்த விவகாரத்தில் அரசியல் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தை மத்திய அரசு ஒட்டுமொத்தமாக மறுக்கவில்லை. திட்டத்துக்கான திருத்தப்பட்ட விரிவான அறிக்கையை திருப்பி அனுப்ப அறிவுறுத்தியுள்ளது. கோவையில் ரயில் நிலையத்துக்கும், பஸ் நிலையத்துக்கும் இடையேயான தூரம் குறைவாக இருக்கிறது. குறைந்தபட்சம் 22 மீட்டர் தொலைவு இருக்க வேண்டும்.
மெட்ரோ ரயில் திட்டம் குறித்த அறிக்கை கடந்த 14-ம் தேதியே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இவ்வளவு நாட்கள் கழித்து பிரதமர் வந்தபின்னர் போராட்டம் நடத்துகிறார்கள். அமெரிக்க அதிபருக்கே சவால்விடும் அளவுக்கு துணிச்சலுள்ள பிரதமருக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும்” என்று தெரிவித்தார்.
நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது தொடர்பாக தமிழக முதல்வர் குற்றம்சாட்டியுள்ளது குறித்த கேள்விக்கு, நயினார் நாகேந்திரன் உரிய பதில் அளிக்காமல், திமுக அரசுதான் விவசாயிகள் முதுகில் குத்துகிறது என்று குறிப்பிட்டுவிட்டுச் சென்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் கூட்டுறவு வார விழா: ரூ.107.71 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கல்
வியாழன் 20, நவம்பர் 2025 5:54:26 PM (IST)

தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 20, நவம்பர் 2025 5:00:12 PM (IST)

பார்சல்களை அனுப்ப தனி ரயில் சேவை : டிச.12-ம் தேதி முதல் தொடக்கம்
வியாழன் 20, நவம்பர் 2025 12:10:02 PM (IST)

தூத்துக்குடியில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: போலி தீவிரவாதிகள் பிடிபட்டனர்!
வியாழன் 20, நவம்பர் 2025 11:29:38 AM (IST)

காதலிக்க மறுத்ததால் மாணவி கொலை : கைதான வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
வியாழன் 20, நவம்பர் 2025 10:52:17 AM (IST)

அரையாண்டுத் தேர்வுகள் டிச.10ம் தேதி தொடக்கம் : கால அட்டவணை வெளியீடு!
புதன் 19, நவம்பர் 2025 5:10:01 PM (IST)


.gif)