» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை மாவட்டத்தில் கொலை, குற்றச் செயல்கள் குறைந்துள்ளன: காவல்துறை விளக்கம்
வெள்ளி 21, மார்ச் 2025 11:57:46 AM (IST)
திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளால் கொலை சம்பவங்கள் குறைந்துள்ளதாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தனியார் தொலைக்காட்சி ஒன்றில், திருநெல்வேலி புறநகரில் கடந்த 5 ஆண்டுகளில் 211 பேர் கொலை, திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகரத்தில் 392 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது, சிறார்கள் 60 பேர் உட்பட கொலை வழக்குகளில் 1045 கைது, பெருமாள்புரம், பாளையங்கோட்டை, பேட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர் பகுதியில் சாதி ரீதியான கொலைகள் அதிகம் பதிவாகி உள்ளது, கொலை நகரமாக மாறும் நெல்லை என்று செய்தி வெளியிட்டது.
ஆனால், திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளால் கொலை சம்பவங்கள் குறைந்துள்ளன. திருநெல்வேலி மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் கொலை குற்றவாளிகளின் செயல்பாடுகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டும், சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏதுமின்றி அமைதியாக இருக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.
இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நெல்லை மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்து வருகிறது. மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளும் நபர்கள் காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.
திருநெல்வேலி மாவட்ட காவல் எல்கையில் கடந்த 2020ம் ஆண்டு 40 கொலைகளும், 2021ம் ஆண்டு 52 கொலைகளும், 2022ம் ஆண்டு 44 கொலைகளும், 2023ம் ஆண்டு 44 கொலைகளும், 2024ம் ஆண்டு 35 கொலைகளும், 2025ம் ஆண்டு 7 கொலைகளும் நடந்துள்ளது. நெல்லை மாநகர எல்கையில் கடந்த 2020ம் ஆண்டு 14 கொலைகளும், 2021ம் ஆண்டு 9 கொலைகளும், 2022ம் ஆண்டு 18 கொலைகளும், 2023ம் ஆண்டு 17 கொலைகளும், 2024ம் ஆண்டு 17 கொலைகளும், 2025ம் ஆண்டு 4 கொலைகளும் நடந்துள்ளன.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் காவல்துறையின் துரித நடவடிக்கையால் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன. மேலும் 11 நபர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தும். கொடுங்குற்றங்களில் ஈடுபட்ட நபர்களில் 1306 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் தற்போது கொலை போன்ற முக்கிய குற்றங்களை குறைக்கும் நோக்கத்தோடு, முக்கிய வழக்குகளில் தனிக் கவனம் செலுத்தி வழக்கு விசாரணையினை விரைவுபடுத்தி தண்டனை பெற வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காவல்துறையின் துரித நடவடிக்கையால் 2025ம் ஆண்டில் மட்டும் இதுவரை 11 கொலை வழக்குகளில் ஈடுபட்ட நபர்களில் ஒருவருக்கு மரண தண்டனையும் 37 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் 10 நபர்கள் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஆகும். மேலும் ஒவ்வொரு சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கும் ஒரு காவலர் என்ற ரீதியில் நியமித்து அவர்களது நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதுடன் ஆகஸ்ட் 2023 முதல் இதுவரையில் 1890 சரித்திர பதிவேடு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டும், 2327 குற்றவாளிகள் எச்சரிக்கப்பட்டும், 846 குற்றவாளிகளிடமிருந்து நன்னடத்தை பிணையம் பெற்றும், 606 குற்றவாளிகள் மீது நன்னடத்தை பிணையம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கு தூக்கு தண்டனையும் 100 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் பெறப்பட்டுள்ளன. மேலும் 4 நபர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தும் கொடுங்குற்றங்களில் ஈடுபட்ட நபர்களில் 943 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக 17304 நடை ரோந்துகள் செய்தும், சாதி அடையாளங்கள் 2129 இடங்களில் அழிக்கப்பட்டும், 7077 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதோடு, இளஞ்சிறார்கள் தவறான வழியில் செல்லாமல் இருப்பதை தவிர்ப்பதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளில் 654 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும், பொது மக்களுக்கு சாதி ரீதியான குற்றங்கள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து 269 கிராம விழிப்புணர்வு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சமூக வலைதளங்களில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றிய நபர்கள் மீது இதுவரை 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 105 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி ஊரக காவல் எல்கையில் கடந்த 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளில் ஜாதிய கொலை எதுவும் நடைபெறவில்லை. மேலும் மாநகர காவல் எல்கையில் பேட்டை, தச்சநல்லூர் பகுதிகளில் ஜாதிய கொலை எதுவும் நடைபெறவில்லை. சில ஊடகங்களில் புள்ளிவிபரங்களை தவறாக சித்தரித்து மிகைப்படுத்தி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மானூர் அருகே நவீன ஆயத்த ஆடைகள் உற்பத்தி அலகு : ஆட்சியர் தொடங்கி வைத்தார்
புதன் 30, ஏப்ரல் 2025 5:10:03 PM (IST)

நடிகர் சங்கம் பதவி நீட்டிப்புக்கு எதிரான வழக்கு: கார்த்தி, விஷால் பதிலளிக்க உத்தரவு
புதன் 30, ஏப்ரல் 2025 4:30:13 PM (IST)

கடமை, கண்ணியம், சுய ஒழுக்கம் முக்கியம்: த.வெ.க. தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!
புதன் 30, ஏப்ரல் 2025 12:01:39 PM (IST)

2026ம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!
புதன் 30, ஏப்ரல் 2025 11:30:02 AM (IST)

பக்தர்களுக்கு அன்னதானம், மோர் வழங்க பதிவுச் சான்றிதழ் பெறுவது அவசியம்: ஆட்சியர்!
புதன் 30, ஏப்ரல் 2025 10:50:22 AM (IST)

நெல்லை பல்கலை. உதவி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் மீது வழக்குப்பதிவு!
புதன் 30, ஏப்ரல் 2025 10:44:19 AM (IST)
