» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கல்லூரி மாணவர்கள் ஓட்டிச்சென்ற கார் மோதி 5 பெண்கள் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

வியாழன் 28, நவம்பர் 2024 10:12:04 AM (IST)



மாமல்லபுரம் அருகே கல்லூரி மாணவர்கள் ஓட்டிச்சென்ற கார் மோதியதில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பழைய ஓஎம்ஆர் சாலை அருகே ஆடு, மாடு மேய்த்துக்கொண்டிருந்த 5 பெண்கள் சாலையோரம் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த சாலையில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் அந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  விபத்தை ஏற்படுத்திய காரில் கல்லூரி மாணவர்கள் வந்ததாகவும், அதில் கார் ஓட்டியவர்கள் உள்பட அனைவரும் மது அருந்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

தற்போது அதில் இருவர் மட்டும் அங்கிருந்த பொதுமக்களிடம் சிக்கினர். மற்ற அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். சிக்கிய இரண்டு பேரை அங்கிருந்த பொதுமக்கள் சராமாரியாக தாக்கினர். உடனே சம்பவ இடத்திற்கு மாமல்லப்புரம் போலீசார் வந்து அந்த இரண்டு பேரை பிடித்துச் சென்றனர். சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அப்பகுதிக்கு விரைந்து வந்த மாமல்லபுரம் போலீசார் விபத்து ஏற்படுத்திய காரில் இருந்த இருவரை பிடித்து போலீசாரின் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது பண்டிதமேடு கிராம மக்கள் போலீசாரை வழிமறித்து கார் ஓட்டி வந்த அவர்களை கீழே இறக்கிவிடுங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விபத்து ஏற்படுத்தியவர்கள் பையனூரில் இருக்கும், அறுபடை வீடு கல்லூரியில் சட்டம் படித்து வரும் மாணவர்கள் என சொல்லப்படுகிறது. திருப்போரூரில் இருந்து கல்லூரிக்கு அதிவேகமாகச் சென்ற போதுதான் இந்த விபத்து நடைபெற்றதாகவும் அதிக வேகத்தில் வந்ததால் அவர்களால் காரை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் அனைவரும் மது போதையிலும் இருந்ததாகவும் விபத்து நடந்து இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். விபத்து ஏற்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய எஸ்.பி சாய் பிரனீத், நிவாரணத் தொகை குறித்து அரசுக்குப் பரிந்துரைக்கப்படும் என்று உறுதியளித்தார். அதை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள், தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தது மட்டுமின்றி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதி உதவியும் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில்,"செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், பழைய மாமால்லபுரம் சாலை, பையனூர் மதுரா பண்டிதமேடு சந்திப்பில் இன்று (நவ. 27) பிற்பகல் 02.20 மணியளவில் திருப்போரூர் வட்டம், பையனூர் கிராமம், பாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆந்தாயி (71), லோகம்மாள் (56), யசோதா (54), விஜயா (53), கௌரி ஆகிய 5 பெண்கள் சாலையோரத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். 

அப்போது, திருப்போரூரில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த TN11 J 7270 என்ற பதிவெண் கொண்ட கார் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் மேற்குறிப்பிட்ட 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory