» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதிதாக கட்சி தொடங்குபவர்கள் தி.மு.க. அழிய வேண்டுமென கூறுகிறார்கள்: முதல்வர் பேச்சு

திங்கள் 4, நவம்பர் 2024 5:25:24 PM (IST)

புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் தி.மு.க. அழிய வேண்டுமென கூறுகிறார்கள் என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அகரம், ஜெகந்நாதன் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பன்னோக்கு மையத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) சார்பில் முதல்-அமைச்சரின் சட்டசபை உறுப்பினர் மேம்பாட்டு நிதியை கொண்டு "முதல்வர் படைப்பகம்" என்ற பெயரில் கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் அமைக்கப்பட்டுள்ளது. இது ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் 'முதல்வர் படைப்பகத்தை' முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து 'அனிதா அச்சீவர்ஸ் அகாடமி'மூலம் பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் தொடரும். கடந்த 2017ம் ஆண்டு மாணவி அனிதா உயிரை மாய்த்துக் கொண்ட போது நாமெல்லாம் பெரிய வேதனைக்கு ஆளானோம். நீட் தேர்வு அனிதாவின் கனவை சிதைத்து விட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிரான, சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலுக்கு ஒரு நாள் ஒன்றிய அரசு பணியத்தான் போகிறது. இன்று இல்லாவிட்டாலும், நாளைக்கு , நாளைக்கு இல்லாவிட்டாலும் நாளை மறு நாள் நீட் தேர்வு கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தேவையில்லாமல் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.. அது தேவையும் இல்லை. எங்கள் நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. 'வாழ்க வசவாளர்கள்' என அண்ணா கூறியதை நினைவில் வைத்து செயல்படுகிறோம்.

புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் தி.மு.க. அழிய வேண்டுமென கூறுகிறார்கள். தி.மு.க ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகளை அவர்கள் ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஏராளமான திட்டங்களை கொண்டுவந்தா மட்டும் பத்தாது.. அதை நிறைவேற்றனும். நாம் அதை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம் என நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன்" என்று அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory