» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீசார் விசாரணை
ஞாயிறு 23, ஜூன் 2024 8:48:14 AM (IST)
புளியங்குடியில் பள்ளிஆசிரியை வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி டி.என்.புதுக்குடி சிவராமு நாடார் 1-வது தெருவைச் சேர்ந்தவர் ரவிகுமார். இவருடைய மனைவி உமாதேவி (42). இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றினர். உமாதேவி நிரந்தர பணியிட ஆசிரியராகவும், ரவிகுமார் தற்காலிக ஆசிரியராகவும் பணியாற்றினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் ஆசிரியர் தம்பதி பள்ளிக்கூடத்துக்கு வேலைக்கு புறப்பட்டு சென்றனர். மதியம் ஆசிரியை உமாதேவி அரைநாள் விடுமுறை எடுத்து கொண்டு, பள்ளியில் இருந்து வீடு திரும்பினார். மாலையில் பள்ளி முடிந்ததும் ஆசிரியர் ரவிகுமார் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் உமாதேவி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கியவாறு கிடந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவிகுமார் கதறி அழுதார். இதுகுறித்து புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த ஆசிரியை உமாதேவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
ஆசிரியை உமாதேவி பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்தாரா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புளியங்குடியில் ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.