» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோடைகால சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது: பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை!

செவ்வாய் 23, ஏப்ரல் 2024 5:00:14 PM (IST)

தமிழகத்தில் பள்ளிகளில் கோடைகால சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது என்று தமாகா இளைஞர் அணித் தலைவர் யுவராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "வரலாறு காணாத அளவில் நடப்பாண்டு ஈரோடு மாவட்டத்தில் வெப்பநிலை உச்சத்தைத் தொட்டு உள்ளது. ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே வெயில் கடுமையாக உள்ளது. ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 20 நாட்களாக வெயில் 100 டிகிரிக்கு மேல் உள்ளது. வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து மே மாதத்தில் 113 டிகிரி வரை உயரலாம் என்ற தகவல் மக்களை அச்சுறுத்தி வருகிறது. 

பொதுவாக வேலூர், சேலம் மாவட்டங்கள்  வெயில் உச்சத்தை தொடும். ஆனால் நடப்பாண்டு ஈரோட்டில் நேற்று 109.4 டிகிரி பேரன்ஹீட்டாக வெப்பம் இருந்தது. கடந்த 15 தினங்களாகவே வெப்பம் படிப்படியாக உயர்ந்து தமிழகத்தின் உச்சகட்ட வெப்பம் ஈரோடு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக கத்திரி வெயில் அக்னி நட்சத்திரம் வரும் மே 4 முதல் 29 வரை ஏற்படும். அக்கால கட்டத்தில் தான் வெயில் உச்சத்தை தொடும். 

ஆனால் அதற்கு மாறாக தற்போது ஒரு மாதம் முன்பாகவே வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. பருவ காலங்கள் தவிர்த்து மழை பெய்கிறது. அப்படி பெய்தாலும் எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையான மழைப்பொழிவு ஒரே நாளில் நிகழ்கிறது. இதற்கு உதாரணம் சமீபத்தில் தூத்துக்குடி மற்றும் சென்னையில் பெய்த பெரும் மழையாகும். மழைக்காலங்கள் இல்லாத சமயத்தில் கூட புயல் தமிழகத்தை தாக்குகிறது. தற்பொழுது வானிலை நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் தொடர்ந்து 60 வயது மேற்பட்டவர்கள் காலை 11 மணி முதல் மூன்று மணி வரை நடமாடக்கூடாது என அறிவித்துள்ளனர். 

பொதுவாகவே பெண்கள், குழந்தைகள் இந்த கடும் வெப்பத்தால் பாதிக்கப்படுவார்கள். இந்நேரத்தில் அதிக தண்ணீர் அருந்துவது, குளிர்பானங்கள் அருந்துவது அவசியம் என மருத்துவர் அறிவுறுத்தி உள்ளனர். தேர்தலில் கடந்த 2014 உடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு வாக்குப்பதிவு குறைந்துள்ளதற்கும் இந்த வெப்பம் ஒரு காரணம் என நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு இன்னும் தேர்வு முடியவில்லை. அவர்கள் பள்ளிக்கு இந்த வெயிலில் நடந்து செல்வது கவலை அளிக்கக் கூடியது. 

அதேபோன்று கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் முழுமை பெறவில்லை. 10, 11, 12 வகுப்பு தேர்வு மட்டுமே முடிவடைந்துள்ளன. முன்னர் எல்லாம் ஒரு சில பள்ளிகளில் மட்டுமே நடைபெற்று வந்த, இந்த சிறப்பு வகுப்புகள் தற்பொழுது அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்களிடையே உளவியல் பிரச்சனை ஏற்படுகிறது. கடும் வெப்பத்தை அரசு கருத்தில் கொண்டு உடனடியாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும். வகுப்புகள் நடத்துவதை நிறுத்த வேண்டும் வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு தேர்வுகளை நடத்தலாம்.  வெப்ப அலை மேலும் உயரம் என்று வானிலை அறிஞர்கள் கூறுகிறார்கள். 

இந்நிலையில் சன் ஸ்ட்ரோக் எனப்படும் அதி வெப்பத்தின் காரணமாக உயிரிழப்பு கூட வட மாநிலங்களில் பல நடந்துள்ளன. வெப்பத்தாக்குதல் அதிகரித்தால் தோல் புற்று நோய்கள் உட்பட பல நோய்கள் மக்களைத் தாக்கும் அத்தகைய சம்பவம் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்க அரசு கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். தேர்வுகளை தள்ளி வைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. காலாண்டு, அரையாண்டு மற்றும் பள்ளி இறுதி டெஸ்ட்களில் எடுத்த மதிப்பெண்ணை கொண்டு மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கலாம். பொதுவாக எட்டாவது வரை பயிலும் மாணவர்களுக்கு அனைவரும் பாஸ் என்ற விதிமுறை உள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகளில் பருவநிலை மாற்றம் குறித்த அமைச்சகங்கள் உருவாகியுள்ளன. அந்த அமைச்சகங்கள் எவ்வாறு இந்த அளவுக்கு வெப்பநிலை கடுமையாக உயர்ந்துள்ளது என்பதை குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பொதுவாக வட மாநிலங்களில் தான் இத்தகைய சூழ்நிலை நிலவும் தமிழகத்திலும் இப்போது அதிக வெப்பம் காணப்படுகிறது. அரசு ஒவ்வொரு வருடமும் 2 கோடி மரங்களை நடுவதாக கூறுகிறது. ஆனால் மற்றொரு பக்கம் வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. 

புவி இயற்கை மாறுபாடு காரணமாக வெப்பநிலை உயர்வதால் அண்டார்டிகா மற்றும் ஆர்டிக் பகுதிகளில்  உள்ள பனிக்கட்டிகள் உருகும் சூழ்நிலை விரைவில் உருவாகும் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர். இதனால் கடல் மட்டம் உயரும். வங்கதேசம் மேற்குவங்கம் சென்னை மற்றும் பல கடலோர மாவட்டங்கள் மற்றும் நாடுகள் பாதிக்கும் என ஏற்கனவே நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். புவி வெப்ப உயர கார்பன் டை ஆக்சைடு வெளியிடும் அதிக அளவிலான அலைகள் பெட்ரோல், டீசல் பயன்பாடுகள் அதிகரிப்பு, வாகனங்கள் பெருக்கம், மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுவது, பூமியில் உள்ள நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவது, மக்கள் தொகை பெருக்கம், நீராதாரங்களை சீரழிப்பது, ஆற்றில் மணலை அதிகம் அள்ளுவது போன்றவை முக்கிய காரணங்களாகும்.

எனவே போர்க்கால அடிப்படையில் மத்திய மாநில அரசுகள் சுற்றுச்சூழல் மாசு மற்றும் இயற்கை மாறுபாடு குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் உலக அளவில் இது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என்றாலும் நமது நாட்டில் இந்த பிரச்சனை எப்படி எதிர்கொள்வது என்பதை அறிவியல் அறிஞர்கள் துணையோடு அரசு நீண்ட கால திட்டங்கள்  பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் இயற்கையை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை அரசும் மக்களும் கடைபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென த.மா.கா  இளைஞர் அணியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory