» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜயகாந்த் உடல்நிலை பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்: தேமுதிக அறிக்கை!

செவ்வாய் 21, நவம்பர் 2023 10:34:04 AM (IST)

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என தேமுதிக சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, தனது உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் விஜயகாந்துக்கு சிறந்த மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டன. தற்போது அவர் வீட்டில் ஓய்வெடுத்து வரும் நிலையில், அவரது பெயரில் தேமுதிக தலைமையகம் வாயிலாக அறிக்கைகள் மட்டும் வெளியாகி வருகின்றன.

மாதம் ஓரிரு முறை சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனைக்குச் சென்று, மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர் மழை மற்றும் குளிர்ந்த சூழல் நிலவி வருவதால், விஜயகாந்த் தொடர் இருமல், காய்ச்சல், சளி, தொந்தரவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த 18-ம் தேதி மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவருக்கு செயற்கை சுவாசம் அளித்து சிகிச்சை வழங்கப்படுவதாக தகவல் பரவியது. இதையடுத்து, கட்சித் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தேமுதிக தலைவர் விஜயகாந்த், வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்றுள்ளார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக பரவும் தவறான செய்திகளை யாரும் நம்பவேண்டாம். இது முற்றிலும் தவறான தகவல். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம், பரப்பவும் வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, "விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டு வருகிறேன். அவருக்கு ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதால், அதற்குரிய மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தாலும் நலமுடன் உள்ளார்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory