» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரயில் முன் பாய்ந்து தலைமைக் காவலர் தற்கொலை: கோவில்பட்டி அருகே பரபரப்பு

வெள்ளி 22, செப்டம்பர் 2023 12:49:39 PM (IST)

கோவில்பட்டி அருகே ரயில் முன் பாய்ந்து தலைமைக் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே மதுரை - திண்டுக்கல் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு காவலர் சீருடையுடன் பெண் ஒருவர் 2 குழந்தைகளுடன் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சமயநல்லூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று, உடல்களை மீட்டு விசாரித்தனர். விசாரணையில், அவர் திருப்பாலையைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரின் மனைவி ஜெயலட்சுமி (30) மற்றும் அவர்களது மகன் காளிமுத்து ராஜா (9), மகள் பவித்ரா (11) என தெரிந்தது. 

ஜெயலட்சுமி மதுரை ரயில் காவல் பிரிவில் கிரேடு- 1 காவலராக பணிபுரிந்துள்ளார். மருத்துவ விடுமுறையில் இருந்த நிலையில், தனது 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சமயநல்லூர் காவல்துறையினர் விசாரிக்கின்றனர். 

தற்கொலை செய்துகொண்ட காவலர் ஜெயலட்சுமி, அவரது கணவர் சுப்புராஜுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் பணியாற்றிய ஜெயலட்சுமிக்கும், அங்கு பணியாற்றிய தலைமை காவலரான கோவில்பட்டியை சேர்ந்த சொக்கலிங்க பாண்டியன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இருவரும் நெருக்கமாக பழகி வந்தது ஜெயலட்சுமியின் கணவர் சுப்புராஜுக்கு தெரிய வந்ததால் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தலைமைக் காவலர் சொக்கலிங்க பாண்டியனுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், இந்த விவகாரம் அவரது மனைவிக்கும் தெரிய வந்ததால் பிரச்சனை ஏற்பட்டு அவரது மனைவி விவாகரத்து பெற்றுச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சொக்கலிங்க பாண்டியன் தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார். அங்கு சென்ற பிறகு, ஜெயலட்சுமி உடன் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், மன அழுத்தத்தில் இருந்த நிலையில் தான் திருச்சிக்கு மாற்றலாகியுள்ளார் ஜெயலட்சுமி. இந்நிலையில், நேற்று முன்தினம் சொக்கலிங்க பாண்டியன், ஜெயலட்சுமி வீட்டுக்கு வந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை முற்றியுள்ளது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையை அடுத்து அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இதையடுத்தே, அவமானம் தாளாமல் காவலர் ஜெயலட்சுமி தனது குழந்தைகளுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

ஜெயலட்சுமி தனது இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அறிந்த தலைமைக் காவலர் சொக்கலிங்க பாண்டியன், சாத்தூர் அருகே சின்னக் கொல்லப்பட்டி பகுதியில் சென்னை - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்த போது தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது உடலை கைப்பற்றிய தூத்துக்குடி ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயலட்சுமி தற்கொலை விவகாரத்தில் போலீஸ் விசாரணைக்கு அஞ்சி, சொக்கலிங்க பாண்டியன் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ரயில்வே பெண் காவலர் ஜெயலட்சுமி, தனது 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவருடன் திருமணத்தை மீறிய தொடர்பில் இருந்த தலைமை காவலர் சொக்கலிங்க பாண்டியனும் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory