» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விவசாயி தலை துண்டித்து கொடூர கொலை : இளநீர் வியாபாரி கைது

வெள்ளி 22, செப்டம்பர் 2023 9:45:07 AM (IST)

ஊத்துமலை அருகே விவசாயியை தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்த இளநீர் வியாபாரியை போலீசார் கைது செய்தனர். 

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள கண்ணாடிகுளம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 42). இவர் ஊருக்கு மேற்கே உள்ள தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தார். நேற்று  வழக்கம் போல் தனது தோட்டத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது, அங்கு மொபட்டில் ஒருவர் வந்தார். அவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வேல்முருகனை சரமாரியாக வெட்டினார். 

இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். எனினும் ஆத்திரம் தீராத அந்த நபர், வேல்முருகனின் தலையை அரிவாளால் வெட்டி துண்டித்தார். பின்னர் சாக்குமூட்டையில் அந்த தலையை போட்டு கட்டி தனது மொபட்டில் எடுத்துச்சென்றார்.  வெறும் உடல் மட்டும் கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக ஊத்துமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு  மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தலையை போலீசார் தேடி வந்தனர். இதுதொடர்பாக பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடி கிராமத்தில் இசக்கியம்மாள் என்பவரது வீட்டின் முன் வேல்முருகனின் தலை மட்டும் கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் கயத்தாறு போலீசுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் இதுதொடர்பாக ஊத்துமலை போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வேல்முருகன் தலையை மீட்டனர். 

தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.  கண்ணாடிகுளத்தை சேர்ந்தவர் வேல்சாமி (37). இவர் கயத்தாறு சுங்கச்சாவடி அருகே இளநீர் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி இசக்கியம்மாள். இவருக்கும், வேல்முருகனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. 

இதை அறிந்த வேல்சாமி தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார்.  பின்னர் வேல்சாமி தனது மனைவியுடன் கயத்தாறு பாரதி நகரில் குடியேறினார். அங்கு வைத்து கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் இசக்கியம்மாள் கோபித்து கொண்டு தனது தாய் வீடான கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடி கிராமத்திற்கு சென்று விட்டார். இதனால் விரக்தியான வேல்சாமி தனது மனைவி பிரிந்து சென்றதற்கு வேல்முருகன் தான் காரணம் என்று ஆத்திரத்தில் இருந்தார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். 

நேற்று  மொபட்டில் கண்ணாடி குளத்திற்கு வேல்சாமி சென்றார். அங்கு தோட்டத்தில் இருந்த வேல்முருகனை வெட்டிக் கொன்று தலையை துண்டித்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இசக்கியம்மாள் வீட்டின் முன்பு போட்டுச் சென்றுள்ளார். மேற்கண்ட தகவல் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த கொடூரக்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேல்சாமியை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட வேல்முருகனுக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory