» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாண்டஸ் புயல் எச்சரிக்கை:சென்னை விமான நிலையத்தில் 25 விமான சேவைகள் ரத்து!

வெள்ளி 9, டிசம்பர் 2022 4:25:59 PM (IST)

மாண்டஸ் புயல் எச்சரிக்கை எதிரொலியாக சென்னை விமானநிலையத்தில் 25 விமான சேவைகள் ரத்துசெய்யப்பட்டு உள்ளது.

'மாண்டஸ்' புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலையில் இருந்து சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் காற்றின் வேகம் வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது. மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து நேற்று பகல் 12 மணிக்கு தூத்துக்குடி செல்லும் விமானம், பிற்பகல் 2.25 மணிக்கு சீரடி செல்லும் விமானம், இரவு 7.10 மணிக்கு மங்களூரு செல்லும் விமானம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. 

அதேபோல் தூத்துக்குடியில் இருந்து மாலை 3.35 மணிக்கு சென்னை வர வேண்டிய விமானமும், சீரடியில் இருந்து மாலை 6.30 மணிக்கும், இரவு 11 மணிக்கு மங்களூரில் இருந்து வர வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டன. மேலும் சென்னையில் இருந்து மும்பை, மதுரை, தூத்துக்குடி, ஹுப்ளி, கண்ணூர், கோலாலம்பூர், சிங்கப்பூர், இலங்கை, டாக்கா ஆகிய இடங்களுக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய 11 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

இந்த நிலையில், இன்று இரவு புயல் கரையை கடக்க உள்ளதால், பலத்த காற்று மற்றும் மழை அதிக அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புயலின் தக்கம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று 25 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது சென்னையில் இருந்து தூத்துக்குடி, மைசூர், கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூரு, திருச்சி, மதுரை, ஹைதராபாத், ஹூப்ளி, கண்ணூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகளுக்கு விமான சேவை ரத்து தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகள் வேறு நாட்களில் விமான பயணம் மேற்கொள்ளலாம் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory