» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கூட்டுறவு வங்கி தலைவர் வருமானத்துக்கு அதிகமாக 3.78 கோடி சொத்து குவிப்பு: முதல் தகவல் அறிக்கை

சனி 23, அக்டோபர் 2021 8:40:10 AM (IST)

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவரும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நண்பருமான இளங்கோவனின் சேலம், சென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி, கரூர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 36 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். 

இந்த சோதனையில் அவர், வருமானத்திற்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தது தெரியவந்துள்ளது. இந்த சோதனையில் 29.77 லட்சம் ரொக்கப்பணம், 21.2 கிலோ தங்க நகைகள், 282 கிலோ வெள்ளி பொருட்கள், 10 சொகுசு கார்கள், 2 வால்வோ சொகுசு பஸ்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், பல கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கான முக்கிய ஆவணங்கள் சிக்கின

சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் புகாரின் பேரில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் மற்றும் அவரது மகன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த புத்திரகவுண்டம்பாளையம் முஸ்லீம் தெருவை சேர்ந்த ராமலிங்கம்பிள்ளை மகன் இளங்கோவன் (57).  இவருக்கு பானுரேகா என்ற மனைவி உள்ளார். இவரது மனைவி 1996ம் ஆண்டு 2ம் நிலை ஆசிரியராக அரசுப் பணியில் சேர்ந்தார். தற்போது, 2004 முதல் புத்திரகவுண்டன்பாளையம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு பிரவீன் குமார், ஜெய என்ற மகன், மகள் உள்ளனர். இளங்கோவின் மகன் பிரவீன் குமார் (27) மோனிகா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர் திருச்சி மாவட்டம் முசிறியில் கடந்த 2016ம் ஆண்டில் இருந்து  கல்வி அறக்கட்டளையின் துணைத் தலைவரானார்.

இளங்கோவன் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு புத்திரகவுண்டன்பாளையத்தில் 4.40 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக இளங்கோவன் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் கடந்த 2018ம் ஆண்டில் அதே பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இளங்கோவன் சொந்த இடத்தில் பெரிய அளவில் வீடு கட்டியுள்ளார். கடந்த 2014 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் அரசியல்வாதிகள் மூலமாக இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன் குமார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அதிகளவு சொத்து சேர்த்துள்ளனர்.இளங்கோவனுக்கு கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதிக்கு முன்பு வரை வீடு, வங்கி கணக்குகள் மற்றும் நகைகள் என மொத்தம் 30,24,540 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் வரை வீடு, வங்கி கணக்குகள், வாகனம் மற்றும் நகைகள் என மொத்தம் 5,61,21,805 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், கடந்த 2014 முதல் 2020 வரை சொத்து மதிப்பு 2,88,61,004 ஆக இருக்க வேண்டும். அதேநேரத்தில் கடந்த 2014 முதல் 2020 வரை தோராயமாக 1,35,95,464 செலவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014 முதல் 2020 வரையிலான காலத்தில் வருவாயை விட 3 கோடியே 78 லட்சத்து 31 ஆயிரத்து 755 சேர்த்துள்ளனர். இந்த தொகை மொத்த வருமானத்தில் 131 சதவீதமாக இருந்தது. இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் பல்வேறு இடங்களில் பினாமிகள் பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். மேலும், திருச்சி மாவட்டம், முசிறி, சுவாமி அய்யப்பன் கல்வி அறக்கட்டளையால் நடத்தப்படும் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் முறைகேடான பணத்திலிருந்து அதிக அளவில் முதலீடு செய்ததாக தெரிகிறது.இதனால் முதல் குற்றவாளியாக இளங்கோவனும், 2வது குற்றவாளியாக சுவாமி அய்யப்பன் எஜூகேஷனல் டிரஸ்ட் துணைத்தலைவர் பிரவீன்குமாரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பணமதிப்பிழப்பு நேரத்தில் 

2016ம் ஆண்டு 500, 1000 பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட போது, இளங்கோவன் தனது பதவியை தவறாக பயன்படுத்தி பல கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மூலம் மாற்றியதற்கான ஆதாரங்கள், அப்போது அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலருக்கு ரூபாய் நோட்டுகள் மாற்றி கொடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகளவில் பழைய ரூபாய் நோட்டுகளை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் அவசர அவசரமாக போலி கணக்குகள் தொடங்கி பணம் பரிமாற்றம் செய்து கொடுத்தார் என்று அப்போது இளங்கோவன் மீது புகார் எழுந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இளங்கோவனுக்கு சொந்தமான 36 இடங்களில் நடந்த சோதனையில் ஆவணங்கள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

சேலம் புறநகர் மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் இளங்கோவனின் வீடு ஏத்தாப்பூர் அருகேயுள்ள புத்திரகவுண்டம் பாளையத்தில் உள்ளது. 3 அடுக்கு கொண்ட இந்த சொகுசு பங்களாவில் 2 லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதிநவீன வசதிகளும் இந்த சொகுசு பங்களாவில் இடம்பெற்றுள்ளது. சாவி மூலம் இந்த பங்களாவை திறக்கமுடியாது. ரிமோட் கன்ட்ரோல் மூலம் அல்லது ரகசிய குறியீட்டு எண்கள் மூலம் தான் திறக்க முடியும். இதனால் நேற்று காலை இளங்கோவன் வீட்டிற்கு சோதனைக்கு வந்த  திருவண்ணாமலை மாவட்ட டி.எஸ்.பி. மதியழகன், இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையிலான போலீசார் வீட்டை திறக்க முடியாமல் 5 மணி நேரம் காத்திருந்து இளங்கோவன் வந்த பிறகு சோதனை நடத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory