» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் கடன் திருவிழாவில் ரூ.129.22 கோடி நலத்திட்ட உதவிகள் : கனிமொழி எம்பி வழங்கல்!

வெள்ளி 22, அக்டோபர் 2021 12:02:06 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் 2431 பயனாளிகளுக்கு ரூ.129.22 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என கனிமொழி எம்பி தெரிவித்தார். 

தூத்துக்குடி ஏ.வி.எம். கமலம் மகாலில் நடைபெற்ற நபார்டு வங்கியின் கடன் திருவிழாவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி 2022-23ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை இன்று(22.10.2021) வெளியிட்டார்கள். நிகழ்ச்சியில், சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் , மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில் ராஜ்,  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி தெரிவித்தாவது: கொரோனா தொற்று நோயினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய இன்றைய காலகட்டத்தில் கடன் திருவிழா மிகவும் முக்கியமான நிகழ்வாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்கள் தொழில் செய்பவர்களாகவும், 10 பேருக்கு வேலை கொடுப்பவர்களாகவும் இருக்கக்கூடியவர்கள் என்பது பெருமைபடக்கூடிய ஒன்றாகும். 

இப்பகுதியில் தொழில்கள் பாதிக்கப்பட்டு பொருளாதாரம் நலிவடைந்து இருக்கின்ற நிலையில் மறுபடியும் தொழில்களை பெருக்கி பொருளாதாரத்தை மீட்டு எடுப்பதற்காக விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் சிறு, குறு தொழில்கள் செய்யக்கூடிய அத்தனை பேருக்கும் இந்த கடன் திருவிழா என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். பொதுவாக ஒரு வங்கிக்கு சென்று கடன் வாங்குவது மிகவும் சிரமமான ஒன்று. ஆனால் இன்று வங்கியாளர்களே மக்களை தேடி வந்து தங்களுடைய இலக்கை தாண்டி கடன்கள் வழங்கியுள்ளார்கள் என்பது மகிழ்ச்சியான ஒன்றாகும். வங்கிகள் வழங்கும் கடன்கள் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். அதேபோல் கடன் பெற்றவர்கள் மீண்டும் திருப்பி செலுத்தினால்தான் மீண்டும் இதுபோன்ற கடன் திருவிழாவை நடத்துவார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தின் ஊரக வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகிக்கும் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு வங்கி) தூத்துக்குடி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் ரூ.12408.53 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்துள்ளது. நடப்பாண்டை விட்டு அதிக கடனாற்றல் வளங்களை மதிப்பீடு செய்துள்ளது.மகளிர் சுய உதவிக்குழுவினர், கல்விக்கடன், வேளாண் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கு ரூ.766 கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றைய தினம் அனைத்து வங்கிகளும் சேர்ந்து 2431 பயனாளிகளுக்கு ரூ.129.22 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரத்தில் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் வங்கியாளர்களும் தங்களது கடன்களை வசூலிக்கும் போது கருணை உணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். கடன் பெறுபவர்கள் வங்கிகள் வழங்கும் கடன் உதவிகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கி தலைமை பொது மேலாளர் சிவானந்த், தூத்துக்குடி உதவி பொது மேலாளர் துரைரராஜ், முன்னோடி வங்கி மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், தி.மு.க. மாணவரணி மாநில துணை செயலாளர் உமரிசங்கர், முக்கிய பிரமுகர்கள் ஜெகன் பெரியசாமி, ஆனந்தசேகரன், ஜெகன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory