» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

திங்கள் 22, டிசம்பர் 2025 4:56:33 PM (IST)



நாகர்கோவிலில் ரூ.4.17 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வு தளத்துடன் கூடிய வட்டாரப் போக்குவரத்து அலுவலக கட்டடத்தினை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று (22.12.2025) கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் இராமபுரம் ஊராட்சிக்குட்பட்ட குலசேகரம்புதூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டடத்தினை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, குத்துவிளக்கேற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகையில்-கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய 2 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும் மற்றும் களியக்காவிளை போக்குவரத்து சோதனை சாவடியும் தற்போது இயங்கி வருகிறது. 

மார்த்தாண்டத்தில் ஓட்டுநர் தேர்வு தளத்துடன் கூடிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கடந்த 20.11.2021 முதல் சொந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. மார்த்தாண்டம் வட்டாரப்போக்குவரத்து அலுவலக ஓட்டுநர் தேர்வு தளமானது, கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநர் தேர்வு தளமாக (Automated Driving Testing Track) மேம்படுத்தப்பட்டு, அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. மேலும் போக்குவரத்து துறை சார்பில் தானியங்கி தகுதிச் சான்று நிலையம் (Automated Testing Station) நாகர்கோவில் இராணித்தோட்டம் அருகில் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகமானது கடந்த 69 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சொந்த இல்லாததாலும், பொதுமக்களுக்கு அதிக சிரமம் ஏற்படுவதாலும் எல்லா சேவைகளும் சேர்ந்து ஒரே இடத்தில் கிடைக்க பெறும் வகையில் புதிய கட்டிடம் வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். 

அக்கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களுக்கு அறிவுறுத்தியதன் அடிப்படையில் போக்குவரத்து துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரன் புதூரில் ரூ.4.17 கோடி மதிப்பில் ஓட்டுநர் தேர்வு தளத்துடன் கூடிய நாகர்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் குலசேகரம் புதூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாகர்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவகத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்கள். இவ்அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் தொடர்பாக புதிய உரிமம் வழங்குதல், பொதுப்பணிவில்லை மேற்குறிப்பு செய்தல், பன்னாட்டு உரிமம் வழங்குதல், உரிமம் புதுப்பித்து வழங்குதல், நகல், உரிமம் வழங்குதல் போன்ற சேவைகளும், பதிவுச்சான்று தொடர்பாக புதிய வாகனம் பதிவு செய்தல், முகவரி மாற்றம் செய்தல், வாகனம் பெயர் மாற்றம் செய்தல், தவணைகொள்முதல் மேற்கொள்ளுதல் மற்றும் ரத்து செய்தல் போன்ற சேவைகளும், அனுமதி சீட்டு தொடர்பாக, புதிய அனுமதிச்சீட்டு வழங்குதல், தேசிய அனுமதி சீட்டு வழங்குதல், அனுமதி சீட்டு சரண் செய்தல் மற்றும் அனுமதிச்சீட்டு புதுப்பித்தல் போன்ற சேவைகளும், மேலும் இதர சேவைகளான வாகன தகுதிச்சான்று புதுப்பித்தல், வெளி மாநில வாகனம் மறுபதிவு மேற்கொள்ளுதல், விபத்து வாகனங்களை ஆய்வு செய்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதன் மூலம் பொதுமக்கள் சிரமம் இல்லாமல் காலதாமதமின்றி ஒரே இடத்தில் ஓட்டுநர் தேர்வு மேற்கொண்டு பயன்பெற முடியும். மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காத்திருப்போர் அறை, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி உள்ளது. மேலும் அலுவலக கோப்புகள் பராமரித்து பாதுகாத்து வைப்பதற்கு உரிய இட வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை சார்ந்த சேவைகளை எளிதாகவும் உடனடியாகவும் பெற்றுக் கொள்ள இதன் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வசதிகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் சார்பில் நன்றியினை காணிக்கையாக்குகிறேன். பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி, விபத்தில்லாமால் கன்னியாகுமரி மாவட்டமாக உருவாக்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு உணவு ஆணையத்தலைவர் என்.சுரேஷ் ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் ந.தளவாய் சுந்தரம் (கன்னியாகுமரி), ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், துணை போக்குவரத்து ஆணையர் (திருநெல்வேலி மண்டலம்) சக்திவேல், நாகர்கோவில் (பொ) மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ்பாபு, பேரூராட்சி தலைவர்கள், அரசு வழக்கறிஞர் மதியழகன், துறை அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory