» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

டேட்டிங் செயலி மூலம் பொறியாளரை தனியாக வரவழைத்து பணம் பறிப்பு - போலீஸ் விசாரணை!

வெள்ளி 19, செப்டம்பர் 2025 12:36:27 PM (IST)

தக்கலையில் டேட்டிங் செயலியை பயன்படுத்திய பொறியாளரை தனியாக வரவழைத்து தாக்கி பணம், செல்போன் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை பெருங்குழி பகுதியைச் சேர்ந்தவர் வினுகுமார் (39). கட்டுமான பொறியாளரான இவர், செல்போனில் பயன்படுத்தக்கூடிய "டேட்டிங் செயலி” ஒன்றை சமூக வலைதள பக்கம் மூலமாக பார்த்தார்.அந்த செயலி மூலம் சில நபர்கள் வினுகுமாரை தொடர்பு கொண்டு பேசினர். அவர்கள் நேரில் சந்திக்கலாம் என்று கூறி பள்ளியாடி அருகே உள்ள குழிக்கோடு பகுதிக்கு அழைத்தனர். அதன்பேரில் வினுகுமாரும் நேற்று மாலை அந்த இடத்துக்கு சென்றார்.

அப்போது அந்த இடத்தில் மறைவாக பதுங்கியிருந்த 3 பேர் வினுகுமாரை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் அவரது செல்போனை பறித்தனர். மேலும் அவரை சரமாரியாக தாக்கி, பணம் கேட்டு மிரட்டினர். இதனால் பயந்துபோன வினுகுமார், தன்னிடம் இருந்த ஆயிரம் ரூபாயை அந்த நபர்களிடம் கொடுத்தார்.

இதையடுத்து அந்த நபர்கள், வினுகுமாரிடம் பறித்த பணம் மற்றும் செல்போனுடன் அங்கிருந்து சென்றுவிட்டனர். தாக்குதலில் காயமடைந்த வினுகுமார் சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தன்னை 3 நபர்கள் தனியாக வரவழைத்து தாக்கி, பணம் மற்றும் செல்போனை பறித்ததாக அவர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், வினுகுமாரை "டேட்டிங் செயலி” மூலம் வரவழைத்து தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்தவர்கள் பள்ளியாடியைச் சேர்ந்த சாலமன் பிரபு (29), வென்டார்வின் மற்றும் இன்னொருவர் என தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory