» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!

சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

கருங்கல் அருகே திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாக அவரது தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு கிழக்கு தாறாவிளையை சேர்ந்தவர் ராபின்சன். இவருடைய மகள் ஜெமலா (26), பி.எஸ்சி. நர்சிங் முடித்துள்ளார். இவரும் இனயம் சின்னத்துறையை சேர்ந்த மரிய டேவிட் மகன் நிதின் ராஜ் (26) என்பவரும் காதலித்து வந்தனர். நிதின்ராஜ் பி.இ. படித்துள்ளார்.

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முதலில் ஜெமலாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், காதல் ஜோடி திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தனர். இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி திருமணம் நடந்தது. 

தொடர்ந்து பெண் வீட்டார் சார்பில் மேல்மிடாலம் கூண்டுவாஞ்சேரியில் புதிய வீடு கட்டி கொடுத்தனர். அந்த வீட்டில் ஜெமலாவும், நிதின் ராஜும் குடும்பம் நடத்தி வந்தனர். நிதின் ராஜ் பி.இ. படித்திருந்த நிலையில் சரியான வேலை இல்லாமல் இருந்தார். மேலும் வெளிநாடு செல்வதாக கூறி வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே சிறு சிறு குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் ஜெமலாவின் பெற்றோருக்கு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவருடைய உடல் கருங்கலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நிதின்ராஜின் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே ஜெமலாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். அங்கு ஜெமலாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கருங்கல் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே ஜெமலாவின் தாயார் புஷ்பலதா கருங்கல் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் 'மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக' கூறியுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் ஜெமலாவின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர். இதனால் புதுப்பெண்ணின் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 28-ந் தேதி திருப்பூரை சேர்ந்த புதுப்பெண் ரிதன்யா என்பவர் காருக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், மற்றொரு அதிர்ச்சியாக இந்த தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory