» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
போலி மருத்துவர்களால் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
வியாழன் 15, மே 2025 11:38:50 AM (IST)
போலி மருத்துவர்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.

இத்தனை மருத்துவ வசதிகள் இருந்தபோதிலும், சிலர் உரிய மருத்துவப் பயிற்சி இல்லாத நிலையிலும், 'நாட்டு வைத்தியம்' என்ற பெயரில் போலி மருத்துவச் சேவைகளை தங்கள் வீடுகளிலேயே வழங்கி வருகின்றனர். சில பெற்றோர், அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் அனைத்து வசதிகளும் இருப்பதையும், திறமையான மருத்துவர்கள் பணியாற்றுவதை குறித்து அறிந்திருந்தும் தவறான வழிகாட்டுதல் மற்றும் மூடநம்பிக்கையால் தங்கள் குழந்தைகளை இந்த போலி மருத்துவர்களிடம் குறிப்பாக காய்ச்சல், காய்ச்சல் காரணமாக ஏற்படும் சிறு கொப்பளங்களுக்காக அழைத்து செல்கின்றனர். அங்கு வழங்கப்படும் தவறான சிகிச்சையால் நிறைய குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வழங்கப்படும் தரமற்ற சிகிச்சைகளால் குழந்தைகளின் உயிருக்கு நேரடி ஆபத்துகள் ஏற்படுகின்றன.
இந்த நிலைகளை தடுக்கும் நோக்கில், சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் கிராம சுகாதார செவிலியர்கள், பிரசவத்துக்கு பின் தாயும் சேயும் வீட்டிற்கு திரும்பிய பின்னர் 1, 3, 7, 14, 21, 42 ஆம் நாட்களில் நேரில் சென்று தாய் சேய் நல பராமரிப்பை அளிக்கின்றனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அருகிலுள்ள அங்கன்வாடி மையங்களுக்கு சுகாதாரத்துறையின் கீழ் பதிவாக சிகிச்சையளிக்க வரும் மருத்துவர் அடங்கிய RBSK குழுவினரிடம் கொண்டு செல்லலாம்.
குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சையை வழங்குவார்கள். மேலும் மேல் சிகிச்சை தேவைப்பட்டால் அதற்கான ஏற்பாடுகளையும் அரசு மருத்துவமனைகளில் செய்து தருவார்கள். ஏனவே பெற்றோர்கள் தங்கள்குழந்தையின் உடல் நலத்தில் ஏற்படும் சந்தேகங்களை தடுப்பூசி வழங்க வரும் செவிலியரிடமோ, அங்கன்வாடி மைய ஆசிரியர்களிடமோ தேவைப்படும் போதெல்லாம் கேட்டு தெளிவு பெறலாம்.
எனவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால், தங்களது பகுதியில் உள்ள கிராம சுகாதார செவிலியரை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். அல்லது அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்குச் சென்று, பயிற்சி பெற்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.மேலும், மாவட்டத்தில் எங்கும் போலி மருத்துவர்கள் முறையற்ற சிகிச்சை அளிக்கும் சம்பவங்கள் தெரியவந்தால், அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரித்துள்ளார்கள்.
இது போன்ற பக்க விளைவுகளில் இருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்கலாம்?
பல சந்தர்ப்பங்களில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மருந்து தருவதிலான கவனக்குறைவுதான் முக்கியமான காரணமாக இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்து கொடுத்தல், ஏற்கனவே காய்ச்சல் அல்லது தொற்று காரணமாக தங்கள் வசம் வைத்துள்ள பழைய மருந்துகளை மீண்டும் பயன்படுத்துதல் போன்றவை பெரும் அபாயத்திற்கு வழிவகுக்கின்றன. இதில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
மருந்துகளை எப்போது, எவ்வளவு அளவில் வழங்க வேண்டும் என்பதை அரசு அல்லது தனியார் குழந்தைகள் நல மருத்துவரிடம் தெளிவாகக் கேட்டு பயன் படுத்த வேண்டும். சிறு பக்கவிளைவுகள் ஏற்பட்டாலும் தாமதிக்காமல் குழந்தைகள் நல மருத்துவரை அணுகவும். குழந்தையின் உடல்நிலை மாறுதல்களில் ஏற்படும் சிறு மாற்றங்களையும் பெற்றோர் கவனக்குறைவாக இருக்காமல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனைகள் இல்லாமல் புதியதாக எந்த மருந்துகளையும் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. முதற்கட்ட அறிகுறிகள் தெரிந்தவுடனே குழந்தைகள் நல மருத்துவரிடம் மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும். ஆகையால், விலைமதிக்க முடியாத குழந்தைச் செல்வங்களின் உடல்நலத்தைக் காக்கும் பொருட்டு, தகுதியில்லாத போலி மருத்துவர்களிடம் செல்வதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா பொதுமக்களை கேட்டுக்கொள்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் மெகா வேலைவாய்ப்பு முகாம்: அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு!
சனி 24, மே 2025 3:30:48 PM (IST)

அகஸ்தீஸ்வரம், இராஜாக்கமங்கலம் பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகள் : ஆட்சியர் ஆய்வு
சனி 24, மே 2025 10:36:54 AM (IST)

டெய்லரை குத்திக் கொன்ற ஓட்டல் ஊழியர் கைது: பேண்ட்டை தைக்க மறுத்ததால் வெறிச்செயல்!
சனி 24, மே 2025 8:47:27 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் படகு ஓட்டுநர் பயிற்சி தொடக்கம்!
வெள்ளி 23, மே 2025 5:52:30 PM (IST)

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 23, மே 2025 5:18:23 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை : போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 23, மே 2025 12:39:23 PM (IST)

கள்ளகுறிச்சிமே 15, 2025 - 06:11:26 PM | Posted IP 104.2*****