» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஆற்றல் திறன்மிகு வாழ்விடங்கள் குறித்த பயிற்சிப்பட்டறை!
வெள்ளி 9, ஆகஸ்ட் 2024 12:57:28 PM (IST)
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹ்யுமன் செட்டில்மென்ட்ஸ் நிறுவனம் மூலமாக "ஆற்றல் திறன்மிகு வாழ்விடங்கள்” குறித்த இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை இன்று (08.08.2024) மற்றும் 09.08.2024 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் உள்ள தனியார் உணவு விடுதியில் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்வின் முதல் நாளான இன்று கன்னியாகுமரி மாநகராட்சியைச் சேர்ந்த கட்டிடப் பொறியாளர்களுக்கு பசுமை கட்டிடங்கள் கட்டுவதன் முக்கியத்துவம் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட வன அலுவலர் பிரஷாந்த், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் உதவித் திட்ட இயக்குநர் விவேக் குமார், ஆகியோர் இந்நிகழ்வினை துவக்கி வைத்து உரையாற்றினர்.
மேலும் இந்நிகழ்வில் திட்ட இணையாளர் ம.விக்னேஷ் குமார், கன்னியாகுமரி மாவட்ட பசுமைத் தோழர் செல்வி.நினா எம். ஜோஸப் மற்றும் பில்டர்ஸ் அசோஸியேசன் ஆ/ப் இந்தியா அமைப்பினைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஆகியோர் பேசுகையில், கன்னியாகுமரி போன்ற அதிக மழைப்பொழிவு பெறக்கூடிய பகுதிகளுக்கு ஏற்ற வகையில் பாரம்பரிய கட்டிடத் தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளித்து கட்டிடங்களை உருவாக்கிடுமாறு இந்நிகழ்வில் கலந்து கொண்ட கட்டிடப் பொறியாளர்களிடம் வலியுறுத்தினர்.