» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மூளையைத் தாக்கும் கொடிய உயிர்க்கொல்லி தொற்று நோய் : சுகாதாரத்துறை எச்சரிக்கை!

திங்கள் 8, ஜூலை 2024 8:43:56 PM (IST)

ப்ரைமரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் நோய் தொற்று தொடர்பான பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 
ப்ரைமரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் நோய் மூளையைத் தாக்கும் ஒரு கொடிய உயிர்க்கொல்லி தொற்று நோய் ஆகும். இந்நோயானது நைக்லீரியா பௌலேரி என்னும் ஒரு வகை அமீபாவினால் பரவக்கூடியதாகும். மூளைக்காய்ச்சலில் காணப்படும் அறிகுறிகளான தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, கழுத்து விரைப்பு, மாயத்தோற்றம் மற்றும் வலிப்பு போன்றவை இந்நோய்க்கான அறிகுறிகளாகும். இந்நோயினால் கேரளாவில் நிகழ்ந்த மரணங்களை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
 
பொது மக்கள் முக்கியமாக குழந்தைகள் தேங்கியுள்ள / மாசுபட்ட தண்ணீரில் குளிப்பதை / நீந்துவதை தவிர்க்க வேண்டும். இதனை உள்ளாட்சி அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டும். தேங்கியுள்ள குளங்கள் மற்றும் குட்டைகளைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். நீச்சல் குளங்களை பொதுசுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களின் படி சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதற்காக நீச்சல் குளங்களில் போதுமான கிளோரினேஷன் செய்ய வேண்டும். இதனை அந்தந்த பகுதிகளில் உள்ள சுகாதாரப்பணியாளர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

அதிக ஆபத்துள்ள பகுதிகளில் க்ளோரினேஷன் அளவானது 2 PPM-ற்கு மேல் இருப்பதை சுகாதாரப்பணியாளர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். நைக்லீரியா பௌலேரியானது க்ளோரினேஷன் அளவானது 2 PPM-க்கு மேல் இருக்கும் போது உயிர்வாழாது. உள்ளாட்சி அமைப்புகள் நீர்நிலைகள் மேற்கூரியவாறு சுகாதாரமாக வைத்துக்கொள்ளவும், பொது மக்கள் சுகாதாரமற்ற குளம் மற்றும் குட்டைகளில் குளிப்பதை தவிர்ப்பதையும் உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் சந்தேகத்திற்குரிய அறிகுறிகள் உள்ள நபர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்குவதோடு அவர்களை உடனடியாக மேற்சிகிச்சைக்காக மூன்றாம் நிலை பராமரிப்பு சேவைக்கான வசதியுள்ள மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்களுடைய விவரங்களை சுகாதாரத்துறைக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கூறப்பட்ட அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி பொதுமக்கள் தங்களை இந்நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory