» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

யானை தாக்கி அரசு ரப்பர் தோட்ட தொழிலாளி சாவு: உறவினர்கள் போராட்டம்!

ஞாயிறு 23, ஜூன் 2024 11:50:45 AM (IST)



பேச்சிப்பாறை அருகே காட்டு யானை தாக்கி அரசு ரப்பர் தோட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார காடுகளை ஒட்டி அரசு ரப்பர் கழக தோட்டங்கள் உள்ளது. இந்த தோட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரப்பர் பால் வெட்டுதல், பால் சேகரித்தல், மரங்களை பராமரித்தல் போன்ற பணிகள் செய்து வருகின்றனர். ரப்பர் தோட்டங்களில் காட்டு யானை, புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகள் அடிக்கடி புகுந்து தொழிலாளர்களை தாக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்தநிலையில் நேற்று காலையில் அரசு ரப்பர் கழக தோட்டத்தில் பால் வெட்ட சென்ற தொழிலாளி யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த விவரம் வருமாறு:-

பேச்சிப்பாைற அருகே உள்ள கோதையாறு மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 58). இவர் அரசு ரப்பர் கழகத்தில் கோதையாறு கோட்டம் குற்றியாறு பிரிவு 2-ல் பால்வெட்டும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று காலை 6.30 மணிக்கு வழக்கம் போல் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த ரப்பர் தோட்டத்தில் பால் வெட்ட ஸ்கூட்டரில் சென்றார்.

ஸ்கூட்டரை தோட்டத்தின் ஒரு பகுதியில் நிறுத்தி விட்டு பால் வெட்ட தயாரானார். அப்போது மணிகண்டனை நோக்கி ஒரு காட்டு யானை வந்தது. இதை சற்று தொலைவில் நின்ற சக தொழிலாளி ஜெயன் (55) பார்த்து கூச்சலிட்டார்.

உடனே மணிகண்டன் யானையிடம் இருந்து தப்பிக்க ஓடினார். ஆனால் யானை அவரை பின்தொடர்ந்து துரத்தியது. சுமார் 100 மீட்டர் தூரம் ஓடிய நிலையில் மணிகண்டன் சோர்வடைந்து ஒரு ரப்பர் மரத்தின் பின்னால் மறைவாக நின்றார். அப்ேபாது துரத்தி வந்த யானை அவரை துதிக்கையால் பிடித்து தூக்கி ஒரு ரப்பர் மரத்தில் அடித்து வீசியது. இதில் மணிகண்டன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து யானை அங்கிருந்து நகர்ந்து காட்டுக்குள் சென்றது.

இந்த சம்பவத்தை தூரத்தில் நின்று பார்த்த ஜெயன் அதிர்ச்சி அடைந்த நிலையில் தொழிலாளர்கள் குடியிருப்பில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்தார். உடனே அருகில் உள்ள தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்த ஆண், பெண் தொழிலாளர்கள் ஓடி வந்தனர்.

இதற்கிடையே காட்டு யானை தாக்கி தொழிலாளி இறந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். பேச்சிப்பாறை ஊராட்சி தலைவர் தேவதாஸ், சி.ஐ.டி.யூ. தோட்டம் தொழிலாளர் சங்க தலைவர் நடராஜன், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவி பீனா அல்போன்ஸ், கடையாலுமூடு பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ரெகு, தொழிலாளர் முன்னேற்ற சங்க கூட்டமைப்பு தலைவர் சிவநேசன், நாம் தமிழர் கட்சி நிர்வாகி சீலன், அ.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்கீர் உசேன், மாவட்ட பா.ஜனதா பொதுச் செயலாளர் நந்தினி, தி.மு.க. நிர்வாகி செல்வகுமார், காணி மக்கள் சங்க நிர்வாகி சவுந்தர் காணி உள்பட பலர் சம்பவ இடத்தில் குவிந்தனர்.

மேலும் பேச்சிப்பாறை சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் (பொறுப்பு) தலைமையில் போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர்.

ஆனால் அங்கு திரண்டு நின்ற உறவினர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் உடலை எடுக்க விடாமல் போராட்டம் நடத்தினர். உயிரிழந்த மணிகண்டனின் குடும்பத்துக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் வனத்துறை மற்றும் ரப்பர் கழக உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து காலை 11 மணிக்கு மாவட்ட வன அலுவலர் பிரசாந்த், ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் கிருபா சங்கர், திருவட்டார் தாசில்தார் புரந்தரதாஸ், வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி, கிராம அலுவலர் அன்னலெட்சுமி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாவட்ட வன அதிகாரி பிரசாந்த் மற்றும் ரப்பர் கழக நிர்வாக அதிகாரி கிருபா சங்கர் ஆகியோர் கூறும்போது, ‘உயிரிழந்த மணிகண்டனின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் ரூ.10 லட்சமும், ரப்பர் கழகம் சார்பில் ரூ.10 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும். இதில் ஈமச்சடங்கு நிதியாக ரூ.50 ஆயிரம் உடனடியாக வழங்கப்படும். வரும் காலங்களில் யானைகள் உள்பட வன விலங்குகள் தொழிலாளர்களை தாக்காத வகையில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதுடன், கூடுதல் கண்காணிப்பு பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்’ என்றனர்.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு உடலை எடுக்க சம்மதம் தெரிவித்தனர். பின்னர் மணிகண்டனின் உடலை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பேச்சிப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உயிரிழந்த மணிகண்டனுக்கு பிளாரன்ஸ் என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மகன்கள் மற்றும் மகள்களுக்கு திருணமாகியுள்ளது. இவர்களில் ஒரு மகனான பிபின் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.காட்டு யானை தாக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசு ரப்பர் கழக தோட்டங்களில் கடந்த காலங்களில் இருந்து தற்போது வரை யானைகளால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிற்றாறு கோட்டம் பகுதியில் ஞானவதி என்ற பெண் யானை தாக்கி உயிரிழந்தார். கடந்த மார்ச் மாதம் ஒரு நூறாம்வயல் பகுதியில் மது என்ற பழங்குடி தொழிலாளி தண்ணீர் குழாயை சரி செய்ய சென்ற போது யானை தாக்கி உயிரிழந்தார். இவ்வாறு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக ரப்பர் கழக தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory