» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாஞ்சில் பெருமைகளை மீட்டெடுக்க வேண்டும் : அமைச்சர் மனோதங்கராஜ் பேச்சு

சனி 13, ஜனவரி 2024 3:52:24 PM (IST)



முத்தலக்குறிச்சி மற்றும் சடையமங்கலம் பகுதிகளில் ரூ.3.85 கோடி மதிப்பில் தேன் பதப்படுத்தும் அலகு, பழக்கூழ் தயாரிக்கும் அலகு மற்றும் வாழை மதிப்புகூட்டுதல் அலகுகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ், திறந்து வைத்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் ஊரக வளர்ச்சித் துறை தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை மற்றும் வேளாண் வணிகம் - விற்பனைத் துறை சார்பில் முத்தலக்குறிச்சி மற்றும் சடையமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று (13.01.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ்,  கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் தேசிய ரூர்பன் இயக்கத்தின் கீழ் தேன் பதப்படுத்தும் அலகு, பழக்கூழ் தயாரிக்கும் அலகு மற்றும் வாழை மதிப்புகூட்டுதல் அலகு ஆகியவற்றை திறந்து வைத்தார்.

விழாவில் அவர் பேசுகையில்: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசானது பல்வேறு நடவடிக்கைகளை மக்கள் நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதன் ஒரு முன்னெடுப்பு தான் முத்தலக்குறிச்சி, சடையமங்கலம், நுள்ளி விளை பகுதியில் இவற்றின் மூலமாக நமது பகுதியில் உள்ள பெண்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்கான திட்டம். ஒரு தொழில் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் அதில் ஆர்வமாக இருந்து செய்ய வேண்டும். நீங்கள் தயாரிக்க கூடிய பொருள் தரமானதாக இருக்க வேண்டும். 

உங்களுக்கு அரசு தரப்பில் இருந்து எந்த உதவிகள் தேவைப்பட்டாலும் எங்களிடம் கூறினால் நாங்கள் அதையும் செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் அரசு எந்த முயற்சியும் உங்களுக்கு செய்தாலும் உங்களுடைய முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும். நம்முடைய மாவட்டத்தில் இந்த உற்பத்தி தொழிலின் மூலமாக பெண்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் உயரும். இன்னும் தமிழ்நாட்டில் நிறைய சிறப்புகள் உள்ளது. இந்திய அளவில் பார்த்தோமானால் பெண் தொழில் முனைவோரின் எண்ணிக்கை நாட்டில் மிகவும் அதிகமாக உள்ளது. 

தமிழ்நாட்டில் 18 சதவீதத்திற்கும் மேலுள்ள நிறுவனங்களில் பெண்கள் தான் தொழில் முனைவோராக உள்ளார்கள். அதை போன்று கல்வி நம்முடைய மாநிலத்தைப் போன்று பிற மாநிலத்தில் இல்லை. பெண்கள் சமத்துவம், பெண்கள் உரிமைகள், பெண்கள் பாதுகாப்பு, பெண்களுக்கான கல்வி, பெண்களுக்கான திட்டங்கள் இதில் அனைத்திலும் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. நமது இந்திய நாட்டை எடுத்துக் கொண்டால் பல்வேறு மூடநம்பிக்கைகள் பழக்கவழக்கங்கள் உள்ளன. பெண்கள் படிக்க கூடாது பெண்களுக்கு சொத்துரிமை இல்லை போன்ற பல்வேறு நிலைகள் காலம் காலமாக இருந்தது. அதை அடித்து நொறுக்கி பெண்கள் சமத்துவம் என்பது நிலைநாட்டப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பழப்பயிர்கள் காய்கறி பயிர்கள் வாசனை திரவிய பயிர்கள், நறுமணப் பயிர்கள் மலைத்தோட்டப் பயிர்கள் என அனைத்து வகை பயிர்களும் ஒருங்கே அமையப் பெற்ற மாவட்டமாகும். தோட்டக்கலை பயிர்களின் மலர்களில் தேனீக்களின் நடமாட்டமும் அதிகம். தேனீ வளர்ப்பானது தோட்டக்கலை பயிர்களில் மகரந்த சேர்க்கை அதிகரிக்க பயன்படுகிறது. ரப்பர் 28200 எக்டர், தென்னை 25092 எக்டர், அன்னாசி 175 எக்டர், இதர தோட்டக்கலை பயிர்கள் 11700 எக்டர், என மொத்தமாக 65225 எக்டர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 

இரப்பர் பயிரில் இளந்தளிர்களிலிருந்து தேன் சேகரிக்கப்படுகிறது. தேனீ வளர்ப்பை பொறுத்தமட்டில் கன்னியாகுமரி மாவட்டம் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும். 50 முதல் 500 குடும்பங்கள் வரை பராமரித்து தேனீ வளர்ப்பை குடிசை தொழிலாகவும், வாழ்வாதாரமாகவும் கொண்டுள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் தேன் புவிசார் குறியீடு பெற்று, மிகவும் தனித்துவம் பெற்று சிறந்து விளங்குகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தேனீ வளர்ப்போருக்கு கடந்த வருடம் மத்திய அரசால் சிறந்த தேனீ வளர்ப்போருக்கான தேசிய அளவிலான விருது வழங்கப்பட்டுள்ளது.

தேனின் பயன்கள் எண்ணில் அடங்காதவை. தேன் இனிமை, வளமை, செழிப்பை கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. மனிதனின் அனைத்து பண்டிகைகளிலும் தேன் முக்கிய பண்டமாக விளங்குகிறது. மருத்துவத்தில் காயங்களை ஆற்றுவதற்கும், கொழுப்பையும், மலச்சிக்கலையம் குணப்படுத்துவதற்கும், வாந்தி, பேதி ஆகியவற்றை குணப்படுத்துவதற்கும் ஒரு சிறந்த அமிர்தமாக விளங்குகிறது. மலைத் தேனீ, கொம்புத் தேனீ, கொசுத் தேனீ, இத்தாலிய தேனீ, இந்தியத்தேனீ என்ற பலவித இனங்கள், தேனீக்களில் உண்டு. இவற்றில் இந்திய தேனீக்களே வணிக ரீதியிலான தேனீ வளர்ப்பிற்கு ஏற்றவை. தேனீக் குடும்பத்தில் ராணீத்தேனீ, ஆண் தேனீ, பணித்தேனீ என்ற மூன்று வகையான தேனீக்கள் குடும்பமாக சேர்ந்து வாழ்கின்றன. 

தற்போது தேன் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் தேவை மற்றும் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தேனீ வளர்ப்பின் மூலம் தேன் மட்டுமின்றி மகரந்ததம், அரசகூழ், தேன் மெழுகு, தேனீ விஷம் போன்ற இதர பயன்பாடுகளையுடைய பொருட்களும் கிடைக்கிறது. ஊரக வளர்ச்சி துறையில் தேசிய ரூர்பன் இயக்கம் ஷியாமபிரசாத் முகர்ஜி Phase-III 2018-ல் தொடங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் சடையமங்கலம் மற்றும் முத்தலகுறிச்சி பஞ்சாய்த்துக்குட்பட்ட 150 நபர்களுக்கு ரூ.28.93 இலட்சம் மதிப்பில் தேனீ வளர்ப்பு, பராமரித்தல் மற்றும் தேன் மதிப்பு கூட்டுதல் தொடர்பான திறன் வளர்ப்பு பயிற்சியானது 150 நாட்கள் அளிக்கப்பட்டது. பயிற்சியில் கலந்து கொண்டவர்களில் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு குழுவாக உருவாக்கப்பட்டது.

தேசிய ரூர்பன் இயக்கத் திட்டத்தின் கீழ் தேன் பதப்படுத்தும் இயந்திரங்கள் ரூ.25.97 இலட்சம், அன்னாசி மற்றும் பிற பழங்களிலிருந்து பழக்கூழ் தயார் செய்வதற்கான இயந்திரங்கள் ரூ. 6.91 இலட்சம் மதிப்பில் பெறப்பட்டு ஊரக வளர்ச்சி துறையின் மூலம் நிறுவப்பட்ட கட்டிடத்திற்குள் வைக்கப்பட்டுள்ளது. 

உபகரணங்களின் மதிப்பில் 10% வைப்பு நிதியாக வைத்த பிறகு குழுவின் கையில் ஒப்படைத்து பயன்படுத்திட ஆவன செய்வது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தற்போது 20 பேர் கொண்ட குழுவில் 9 நபர்களுக்கு மாவட்ட தொழில் மையத்தின் மூலம் தலா ரூ.35,000/- மானியத்துடன் கூடிய கடனுதவியாக பெற்றிட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள பயிற்சியாளர்களுக்கும் கடனுதவி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குழுவின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் நாஞ்சில்நாடு வாழை மற்றும் இதர பயிர்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் 2017-18 ஆம் ஆண்டு 1000 விவசாயிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதில் பொது பிரிவினர் 519 நபர்கள், ஆதி திராவிடர் 72 நபர்கள், பெண்கள் 409 நபர்கள் உள்ளார்கள். சீட்ஸ் என்னும் ஆதார நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது.

தேசிய ரூர்பன் இயக்க திட்டத்தின்கீழ் தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சடையமங்கலம் தொகுப்பில் பொருளாதார மேம்பாட்டுத் திட்டப்பணிகள் மேற்கொள்ள மாநில அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவின் அனுமதி பெறப்பட்டுள்ளது. முத்தலக்குறிச்சி கிராமத்தில் வாழைக்காய் சிப்ஸ் மற்றும் வாழைக்காய் மாவு அலகுகள் அமைக்க மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக பணிகள் மேற்கொள்ளவும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கண்காணிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான உற்பத்திக்கருவிகள் மற்றும் தளவாட இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்காக ரூ.134.50/- இலட்சத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ரூ.99.5 இலட்சத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சிப்ஸ் அலகிற்கான உற்பத்தி கருவிகள் ரூ.50.18/- இலட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்து நிறுவப்பட்டு சிப்ஸ் உற்பத்தி செய்வதற்காக தயார் நிலையில் உள்ளது. இதனை நாஞ்சில்நாடு வாழை மற்றும் இதர பயிர் உற்பத்தியாளர் நிறுவனம் மேற்கொள்ளப்படவுள்ளது. செயல்படுத்திட குறு ஒப்பந்தம் மேற்கொள்ளபடவுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகயளவு விவசாய பொருட்கள், உற்பத்தி பொருட்கள், கிடைக்கிறது. அதனை எவ்வாறு பாதுகாப்பது, சந்தைப்படுத்துவது, நாஞ்சில் நாட்டில் மறைந்த பழமைவாய்ந்த விவசாயத்தினை மீட்டு எடுப்பதற்கும் பொதுமக்கள், விவசாயிகள், சுயஉதவிக்குழுக்கள், தொழில் முனைவோர்கள் முன்வர வேண்டும். மாவட்டத்தில் பெரும்பாலும் கிடைக்கப்பெறும் பொருட்களை இது போன்ற திட்டங்களின் வாயிலாக ஏற்றுமதி செய்து புதிய தொழில் முனைவோர்களாக திகழ்ந்து மாவட்டத்தின் பழமையினை மீட்டு எடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

அதனைத் தொடர்ந்து தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தேனீ வளர்ப்பு, பராமரித்தல் மற்றும் தேன் மதிப்பு கூட்டுதல் தொடர்பான திறன் வளர்ப்பு பயிற்சி பெற்ற 150 பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இணை இயக்குநர் (வேளாண்மை) அ.ஆல்பர்ட் ராபின்சன், துணை இயக்குநர்கள் யோ.ஷீலா ஜாண் (தோட்டக்கலை), சுந்தர் டேனியேல் பாலஸ் (வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) எஸ்.கீதா, உதவி திட்ட அலுவலர் (உட்கட்டமைப்பு-1) அ.சக்தி அநுபமா, தக்கலை ஊராட்சி ஆணையாளர் அன்பு,வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெ.புஷ்பலதா, (கி.ஊ), தக்கலை ஊராட்சி ஒன்றிய தலைவர் எம்.அருள் ஆன்றனி, ஊராட்சி தலைவர்கள் எஸ்.சிம்சன் (முத்தலக்குறிச்சி), டி.அருள்ராஜ், (சடையமங்கலம்), உள்ளாட்சி பிரதிநிதிகள், சுயஉதவிக்குழுக்கள், விவசாயிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory