» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் ரயில் நிலைய இடநெருக்கடியால் வந்தேபாரத் ரயில் குமரி மாவட்டம் புறக்கணிப்பு!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 10:08:22 AM (IST)
நாகர்கோவில் ரயில் நிலைய இடநெருக்கடியால் வந்தேபாரத் ரயில் திட்டத்தில் குமரி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் நலச்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

தெற்கு ரயில்வே பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டு சென்னை சென்ட்ரலிலிருந்து தாம்பரம் திருச்சி, மதுரை வழியாக திருநெல்வேலிக்கு ஏழைகளின் ரதம் என்று சொல்லப்படும் கரீப்ரதம் வாராந்திர சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள இந்த ரயில்கள் மதுரை கோட்டத்தின் எல்லையான திருநெல்வேலியின் நிறுத்தப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் திருநெல்வேலியை மையமாக வைத்து இன்னும் பல புதிய ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்ட ரயில்களை நாகர்கோவில் அல்லது கன்னியாகுமரி அல்லது திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு நாகர்கோவில், திருநெல்வேலி வழியாக இயக்கப்பட்டிருந்தால் குமரி மாவட்ட பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
திருவனந்தபுரம் கோட்டம் காரணம்?
திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்கள் மாநிலம் வழியாக இயங்கும் ரயில்கள் வராமல் பக்கத்து மாவட்டத்தில் நிறுத்தி உள்ளது நினைக்கும் போது நமது பகுதி திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள காரணத்தால் இது போன்ற ரயில்கள் வராமல் உள்ளது என்று அனைவருக்கும் தெள்ள தெளிவாக தெரிகிறது. இதனால் குமரி மாவட்ட பகுதிகள் மதுரை கோட்டத்தின் கீழ் வந்தால் இதுபோன்ற ரயில்கள் இயக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு பயணிகள் மத்தியில் இயல்பாய் தோன்றுகிறது. இது மட்டுமல்லாமல் ஏன் இது போன்ற ரயில்களை திருவனந்தபுரம் கோட்டத்தில் நாகர்கோவிலிருந்து இயக்க முடியவில்லை என்று கேள்வி அனைவரது மனதிலும் எழுகின்றது.
இடநெருக்கடி பிரச்சனை:
வந்தேபாரத் ரயில் , சென்னை சிறப்பு ரயில்கள் குமரி மாவட்டத்திலிருந்து இயக்க முடியாமல் போனது முக்கிய காரணமாக நாகர்கோவில் ரயில் நிலையம் இடநெருக்கடி பிரச்சனையால் சிக்கி இருப்பதே ஆகும். ஏன் நாகர்கோவிலில் இட நெருக்கடி ஏற்படுகிறது என்று பார்த்தால் நாகர்கோவிலிருந்து அதிக அளவில் ரயில்கள் கேரளா வழியாக அதாவது திருவனந்தபுரம் மார்க்கம் இயங்குகின்ற காரணத்தால் இடநெருக்கடியால் பிரச்சனை ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்கு மாற்று வழிகளை பற்றி ஆராய்ந்து நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுக்க வேண்டும் குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாகர்கோவில் டவுன் வழியாக இயக்குதல்
நாகர்கோவில் ரயில் நிலைய இடநெருக்கடியை குறைப்பதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு முழு அளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சென்னை - கொல்லம் அனந்தபுரி ரயில் கடந்த வருடம் முதல் நாகர்கோவில் டவுண் வழியாக இயக்கப்பட்டது. இது போன்று குருவாயூர் - சென்னை, மதுரை - புனலூர் ஆகிய ரயில்களையும் நாகர்கோவில் டவுன் வழியாக இயக்க வேண்டும்.
இவ்வாறு இயக்கப்பட்டால் காலை மற்றும் மாலை நேரத்தில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் நடைமேடை இடநெருக்கடி பிரச்சனை ஓரளவுக்கு குறையும். இவ்வாறு குறையும் போது நாகர்கோவில் - தாம்பரம் வாரம் மூன்று முறை ரயிலை தினசரி ரயிலாக மாற்றம் செய்து இயக்க அதிக வசதி வாய்ப்புகள் ஏற்படும். இது குமரி மாவட்டத்திலிருந்து தங்கள் மாநிலத்தின் தலைநகர் சென்னைக்கு செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதைப்போல் திருவனந்தபுரம் -நாகர்கோவில் பயணிகள் ரயிலை நாகர்கோவில் டவுண் வழியாக திருநெல்வேலி வரையிலும் திருநெல்வேலி - நாகர்கோவில் பயணிகள் ரயிலை நாகர்கோவில் டவுன் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ரயில்வே துறையிடம் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இயக்கும் பட்சத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் நிலவும் நாகர்கோவில் நடைமேடை இடநெருக்கடி பிரச்சனை ஓரளவுக்கு குறையும். இந்த இரண்டு ரயில்களையும் நீட்டிப்பு செய்து இயக்கும் போது தற்போது நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரத்துக்கு அதிக அளவில் பயணிகள் ரயில் சேவை உள்ளது போன்று பகல் நேரத்தில் திருநெல்வேலிக்கும் நேரடி ரயில் சேவை வசதி கிடைக்கும்.
நாகர்கோவில் - மங்களூர் ஏரநாடு ரயிலை திருவனந்தபுரத்துடன் நிரந்தரமாக நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது போன்று கன்னியாகுமரி - திப்ருகார் , நாகர்கோவில் - ஷாலிமார், திருநெல்வேலி - பிலாஸ்பூர் ஆகிய ரயில்களை கொச்சுவேலி உடன் நிறுத்த வேண்டும். இவ்வாறு இந்த ரயில்கள் நிறுத்தும் பட்சத்தில் திருநெல்வேலியிருந்து புறப்படும் வந்தேபாரத் ரயிலை நாகர்கோவில் வரை எளிதாக நீட்டிப்பு செய்து நாகர்கோவிலில் வைத்து இரவு நேர பராமரிப்பு செய்ய முடியும்.
சார்மினார் ரயில்
தாம்பரத்தில் இருந்து ஹைதராபாத்துக்கு செல்லும் சார்மினார் ரயிலை நாகர்கோவில் அல்லது கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது வருகிறது. இந்த ரயிலை நீட்டிப்பு செய்யும் பட்சத்தில் இந்த ரயிலை நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இரவு 8:00 மணி முதல் காலை 5:00 மணி வரை காலியாக நிறுத்தி வைக்க ஓரு நடைமேடை தேவைப்படுகிறது.
இந்த ரயில் நாகர்கோவில் வருகிற நேரத்தில் நாகர்கோவிலிருந்து இயங்கும் ஒரு சில ரயில்களை குறிப்பாக சென்னை - குருவாயூர் மற்றும் மதுரை - புனலூர் ஆகிய இரண்டு ரயில்கள் டவுன் வழியாக இயக்கும் போது நாகர்கோவில் ரயில் நிலைய நடைமேடை காலியாகி இந்த தாம்பரம் - ஐதராபாத் சார்மினார் ரயிலை எளிதாக நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்து நாகர்கோவில் நடைமேடையில் நிறுத்தி வைத்து எளிதாக இயக்க முடியும்.
நேத்ராவதி ரயில் நீட்டிப்பு:
கன்னியாகுமரியிலிருந்து மும்பைக்கு இயங்கி வந்த ரயிலை புனேவுடன் நிறுத்தப்பட்ட காரணத்தால் அதற்கு மாற்று ஏற்பாடாக திருவனந்தபுரம் - மும்பை நேத்ராவதி ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்கிவிட்டு இந்த கன்னியாகுமரி - புனே ரயிலை கொச்சுவேலி உடன் நிறுத்தி விடலாம். இவ்வாறு செய்யும் பட்சத்தில் நாகர்கோவில் ரயில் நிலைய இடநெருக்கடி பிரச்சனை வெகுவாக குறையும். கன்னியாகுமரியிலிருந்து மும்பைக்கு கொங்கன் வழிதடத்தில் தினசரி ரயில் சேவையும் கிடைக்கும். இவ்வாறு குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் ஸ்ரீராம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
வெள்ளி 9, மே 2025 4:00:54 PM (IST)

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்ய சிறப்பு முகாம்: ஆட்சியர்
வெள்ளி 9, மே 2025 3:44:06 PM (IST)

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமரி மாவட்டம் 5 வது இடம்பெற்று சாதனை : ஆட்சியர் வாழ்த்து
வெள்ளி 9, மே 2025 10:12:02 AM (IST)

பிளஸ் 2 மாணவருடன் பள்ளி மாணவி ஓட்டம்? குமரி அருகே பரபரப்பு
வியாழன் 8, மே 2025 5:24:43 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 7, மே 2025 5:14:58 PM (IST)
