» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை: பாதிப்புகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
திங்கள் 18, அக்டோபர் 2021 4:54:33 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலா சாமி, ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட செண்பகராமன்புதூர் ஊராட்சி, சகாயநகர் ஊராட்சி, தாழக்குடி பேரூராட்சி, திக்குறிச்சி, பள்ளிக்கல் ஆகிய பகுதிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலா சாமி, மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், தலைமையில் இன்று (18.10.2021) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் 33 செ.மீ மழை பொழிந்திருக்கிறது. கடந்த 25 வருடங்களில் மிக அதிகளவு மழை பொழிந்துள்ளது. அனைத்து பகுதிகளில் பெய்த மழையினால் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தன் காரணமாக உபரிநீர் வெளியேற்றப்பட்டதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர்கள் மூழ்கி உள்ளது. குடியிருப்பு பகுதிகளிலும் நீர் சூழ்ந்துள்ளது என்ற செய்தியை கேள்விப்பட்டதுடன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக கண்காணிப்பு அலுவலராக என்னை அனுப்பி வைத்துள்ளார்கள்.
நான் மாவட்ட ஆட்சியருடன் பல இடங்களில் நேரடியாக சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளோம். நமது மாவட்டத்தை பொறுத்தமட்டில் ஏறக்குறைய 30 ஏக்கர் அளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. 125 ஏக்கர் வாழை மரம் மூழ்கியுள்ளது. 2½ ஏக்கர் அளவில் மரவள்ளிக்கிழங்கு பாதிப்படைந்திருந்தாலும், நீர் வடிந்து கொண்டு வருவதால் அதிக பாதிப்பு இருக்காது. மழையின் அளவு படிப்படியாக குறைந்துள்ளது. நீர் வடிந்து கொண்டிருப்பதால் வாழை மற்றும் மரவள்ளி பயிரையும் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறோம். நெற்பயிர் கொட்டி கிடப்பதாலும், அது முளைக்க ஆரம்பிப்பதாலும் மீட்டெடுக்க முடியாத நிலையில் இருக்கிறது.
15 நாட்களுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் முன்பாக வடகிழக்கு பருவமழை குறித்து முன்னேற்பாடு கூட்டம் நடத்தப்பட்டது. அனைத்துத்துறை அலுவலர்களும் பருவமழையினை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும். அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டபோது, அனைத்து அலுவலர்களும் தயார் நிலையில் இருந்தார்கள். அந்த வகையில் தான், பொதுப்பணித்துறை 24 மணி நேரமும் அணைகட்டு பகுதியில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்கிறார்கள். மழை வரவர அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டு வருவதால் தேவையான அளவிற்கு அணையிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு, பெரும்சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு தேவையான உணவு உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் துறைசார்ந்த அலுவலர்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. மழை இன்று குறைந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம். எனவே, எந்தவிதமான பேரிழப்பு ஏற்படாதவாறு மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்கிறது.
நமது மாவட்டம், ஒக்கிபுயல் உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளை சந்தித்துள்ளது. அப்போது எந்த அளவிற்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதோ அதேமாதிரி உரிய கணக்கெடுப்பு வாயிலாக சாலைகள், விவசாயம் உட்பட அனைத்துத்துறைகளிலும் கணக்கெடுக்கப்பட்டு, அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டு அரசாணை பெறப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு, கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலா சாமி, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.
ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், இணை இயக்குனர் (வேளாண்மை) எஸ்.சத்திய ஜோஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எம்.ஆர்.வாணி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷீலா ஜாண், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) மரு.கிருஷ்ணலீலா, பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) சங்கரலிங்கம் வட்டாட்சியர்கள் தாஜ் நிஷா (தோவாளை), பாண்டியம்மாள் (கல்குளம்), விஜயலெட்சுமி (விவங்கோடு), ஜூலியன் ஜீவர் (கிள்ளியூர்), தோவாளை வேளாண் உதவி இயக்குனர் எப்.ஜோஸ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்குரிமையை பாதுகாக்க வேண்டியது நம் கடமை: விஜய் வசந்த் எம்.பி அறிக்கை
செவ்வாய் 4, நவம்பர் 2025 9:25:05 PM (IST)

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
திங்கள் 3, நவம்பர் 2025 8:19:38 PM (IST)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: 3 முறை நேரில் சென்று விசாரிக்க அறிவுறுத்தல்
சனி 1, நவம்பர் 2025 5:36:12 PM (IST)

குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த நாள் : மார்ஷல் நேசமணி சிலைக்கு மரியாதை!
சனி 1, நவம்பர் 2025 12:48:19 PM (IST)

ஐயப்ப பக்தர்கள் சீசன் நவ. 17ல் தொடக்கம்: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சனி 1, நவம்பர் 2025 12:09:30 PM (IST)

பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேர் கைது: 6 வாகனங்கள் மீட்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:34:24 PM (IST)


.gif)