» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அந்தியோதயா ரயில் பயண நேரத்தை குறைக்க வேண்டும் : பயணிகள் நலசங்கம் கோரிக்கை

புதன் 22, மே 2019 11:45:40 AM (IST)

குமரி பயணிகளின் மிகுந்த வரவேற்பை பெற்று அதிக வருவாய் பெறும் ரயிலாக அந்த்யோதயா ரயில் விளங்குகிறது. இதில் ரயிலின் பயண நேரத்தை குறைக்க வேண்டுமென என கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த்யோதயா ரயில்கள் முற்றிலும் முன்பதிவுசெய்யப்படாத பொதுப் பெட்டிகளை கொண்டதாகும். இந்த ரயில்கள் அதிக பயணிகள் நெருக்கடி கொண்ட பாதைகளில் இயக்கப்படுகிறது. இதன்படி நாகர்கோவில் - சென்னை மார்க்கம் அதிக போக்குவரத்து நெருக்கடி நிறைந்த பகுதியாக இருப்பதால் இந்த வழித்தடத்தில் தாம்பரம் - திருநெல்வேலி மார்க்கத்தில் 2018-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வந்தது பின்னர் இந்த ரயில் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாக மார்ச் மாதம் நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்திய அளவில் பத்து அந்தோதையா ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் நாகர்கோவில் - தாம்பரம் ரயில் மட்டுமே தினசரி அந்தோதையா ரயில் சேவை ஆகும். மற்ற அனைத்து ரயில்களும் வாரம் ஓருமுறை, இருமுறை என இயங்கும் ரயில்கள் ஆகும்.

தாம்பரம் - நாகர்கோவில் அந்த்தோதையா ரயில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மைலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக நாகர்கோவிலுக்கு இயக்கப்படுகிறது. குமரி மாவட்ட பயணிகள் டெல்டா மாவட்ட பகுதிகளுக்கு (சிதம்பரம், மைலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர்)  செல்ல தினசரி ரயிலாக இந்த ஒரு ரயிலே உள்ளது. தற்போது இந்த பகுதிகளுக்கு செல்ல எந்த ஒரு தினசரி இரவு நேர படுக்கை வசதி கொண்ட ரயில் சேவையும் கிடையாது. ஆகவே இந்த ரயிலில் குமரி மாவட்ட பயணிகள் அதிக அளவில் பயணம் செய்கின்றனர்.

இந்த அந்த்தோதையா ரயில் முதலில் அறிவிக்கும் போது நாகர்கோவிலிருந்து அறிவிக்காமல் மதுரை கோட்டத்தின் கடைசி எல்லையான திருநெல்வேலியுடன் நிறுத்தப்பட்டது. இதைப்போல்தான் திருச்சி இன்டர்சிட்டி ரயிலும் முதலில் ரயில் அறிவிக்கும் போது திருநெல்வேலிக்கு அறிவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது. குமரி மாவட்டத்துக்கு இயக்கப்படாதது குமரி மாவட்ட ரயில்வே பகுதிகள் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் அமைந்துள்ள காரணத்தால் தான் இயக்கப்படவில்லை என்ற ஒரு கருத்தும் குமரி பயணிகள் மத்தியில் உள்ளது.  

பின்னர் பல்வேறு அமைப்புகள், மக்கள் பிரதிநிதிதகள் என அனைவரின் கோரிக்கையை ஏற்று கடும் போரட்டத்துக்குபின் மத்திய இணை அமைச்சர் பொன்னார் முயற்சியால் இந்த ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. தற்போது இந்த  ரயில் குமரி மாவட்ட பயணிகளால் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நீட்டிப்பு செய்த இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தினசரி வருவாய் சராசரி 25,000 முதல் 40,000 வரை பெற்று வருகிறது.  மார்ச் மாதம் இந்த ரயிலில் சுமார் 5000 பயணிகள் பயணம் செய்து சுமார் 5,00,000 வருவாயும் ஏப்ரல் மாதத்தில் சுமார் 7500    பயணிகள் பயணம் செய்து 10,00,000 வருவாயும் ஈட்டி தந்துள்ளது. 

இந்த ரயில் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது நாகர்கோவிலிருந்து தாம்பரம் மார்க்கம் பயணம் செய்யும் போது மணிக்கு 43 கி.மீ வேகத்தில் பயணம் செய்து 764 கி.மீ தூரத்தை கடக்க 17மணி 55 நிமிடங்கள் எடுத்து கொள்கிறது. இதே தூரத்தை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் 11 மணி 49 நிமிடங்கள் மட்டுமே எடுத்து கொள்கிறது. இதைப்போல் மறுமார்க்கம் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பயணம் செய்து 15மணி 20 நிமிடங்கள் எடுத்து கொள்கிறது. 

ஆனால் இதே தூரத்தை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் 11மணி 45நிமிடங்கள் மட்டுமே எடுத்து கொள்கிறது. ஆகவே இந்த ரயிலின் காலஅட்டவணையை மாற்றம் செய்து இந்த ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி காலை 6:00 மணிக்கு தாம்பரம் செல்லதக்க வகையில் மாற்றம் செய்து இயக்க வேண்டும். இதைப்போல் மறுமார்க்கமும் இந்த ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி பயணநேரத்தை குறைக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory