» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 105 இந்தியர்கள் உட்பட 384 சுற்றுலாப் பயணிகள் மாயம்!

புதன் 26, ஆகஸ்ட் 2026 4:47:40 PM (IST)

NepalFlood.jpg

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், 291 வெளிநாட்டவர் உட்பட 384 சுற்றுலாப் பயணிகளைக் காணவில்லை என நேபாள சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. இதில் 105 இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேபாளத்தின் வடக்கே திபெத் எல்லையை ஒட்டியுள்ள ரசுவா மாவட்டத்தில் இன்று காலை 8.30 மணியளவில் போட்டே கோசி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சற்றும் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் ஆற்றங்கரையிலிருந்த பல்வேறு கட்டிடங்கள், வாகனங்கள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. ஆரம்பத்தில் 8 பேர் உயிரிழப்பு என உறுதி செய்யப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான வெளிநாட்டவர்கள் இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, அமெரிக்கா, மலேசியா, பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மாயமான 105 இந்தியர்களும் சாம்ராட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ், லீஃப் ஹாலிடேஸ் போன்ற சுற்றுலா முகமைகள் மூலம் அங்குச் சென்றவர்கள் எனத் தெரிகிறது.

உதவி எண்கள் அறிவிப்பு:

சுற்றுலாப் பயணிகள் குறித்த விவரங்களை அறிய நேபாள சுற்றுலாத் துறை அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது:

    கட்டணமில்லா அவசர எண்: 1234

    ஹாட்லைன் எண்: 1144

    சுற்றுலா காவல்துறை தொடர்பு எண்: +977 98512 89445

வெள்ளத்திற்கான காரணம் என்ன?

திடீரென இத்தகைய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக நேபாள மழை மற்றும் வெள்ளக் கணிப்பு மையம் தெரிவித்துள்ளது. ரசுவா மாவட்டத்தில் கணிசமாக மழை பெய்திருந்தாலும், அது இந்த அளவுக்கு வெள்ளப்பெருக்கை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றும், ஒருவேளை திபெத் பகுதியில் பனிப்பாறை உடைந்து உருகியதால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதா என்பது குறித்தும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

கங்கையின் கிளை ஆறுகளான கோசி மற்றும் கண்டக் ஆறுகள் நேபாளம் வழியாகப் பீகாரில் பாய்வதால், அம்மாநிலத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பீகார் தலைமைச் செயலாளர் பிரத்யாயா அம்ரித், ஆற்றங்கரையோர மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தி, மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

திபெத்திலும் பாதிப்பு – அவசர ஆலோசனை:

இதற்கிடையே, திபெத்தின் கிராங் பகுதியிலும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாகச் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

நேபாள பிரதமர் பலேந்திரா ஷா அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி, மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். ராணுவம், காவல்துறை மற்றும் ஆயுதப்படையினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 2 ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory