» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நார்வே பெண் நிருபரின் கேள்விக்குப் பதிலளிக்காமல் சென்றார் பிரதமர் மோடி! – ராகுல் காந்தி சாடல்!
செவ்வாய் 19, மே 2026 3:39:00 PM (IST)

நார்வே நாட்டுப் பெண் பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்காமல் நேரடியாக வெளியேறிய சம்பவம் உலக அரங்கில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நெதர்லாந்து மற்றும் சுவீடன் நாடுகளின் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நார்வே நாட்டுக்குச் சென்றுள்ளார். சமீபத்தில் இந்தியா - ஐரோப்பிய தடையற்ற வர்த்தகக் கூட்டமைப்பு (EFTA) இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இரு நாடுகளின் பொருளாதார உறவை மேம்படுத்தும் நோக்கில் இப்பயணம் அமைந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் நார்வே நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் அந்நாட்டுப் பிரதமர் ஜோனாஸ் மற்றும் இந்தியப் பிரதமர் மோடி ஆகியோர் கலந்துகொண்ட கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, நார்வே நாட்டைச் சேர்ந்த பிரபல பெண் பத்திரிகையாளர் ஹெல்லே லிங் என்பவர் பிரதமரை நோக்கி ஒரு கேள்வியை எழுப்பினார். ஆனால், அதற்குப் பதிலளிக்காமல் பிரதமர் மோடி அங்கிருந்து உடனடியாக வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் ஹெல்லே லிங் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் நேரடி வீடியோ ஒன்றை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "உலகின் மிகச் சுதந்திரமான பத்திரிகைத்துறையிடம் இருந்து எழும் சில முக்கியக் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்துவிட்டுச் செல்லலாமே?.." என்று அவர் கேட்க, பிரதமர் மோடி அதற்கு எந்தப் பதிலும் கூறாமல் அமைதியாக அங்கிருந்து கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உலகளவில் வைரலாகி வருகிறது.
வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம்:
பிரதமர் வெளியேறியதைத் தொடர்ந்து, அங்கு நின்றிருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளை நார்வே பத்திரிகையாளர்கள் முற்றுகையிட்டு சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். அப்போது செய்தியாளர் ஹெல்லே லிங், "நாங்கள் உங்களை ஏன் நம்ப வேண்டும்? இந்தியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களை நிறுத்துவீர்கள் என்று உங்களால் உலகிற்கு உறுதியளிக்க முடியுமா? இந்தியப் பத்திரிகைகளின் விமர்சனக் கேள்விகளுக்குப் பிரதமர் மோடி என்றாவது பதிலளிக்கத் தொடங்குவாரா?" என்று அதிரடியாகக் கேட்டார்.
இதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் சிபி ஜார்ஜ்: "இந்தியா சமத்துவத்தையும் மனித உரிமைகளையும் முழுமையாக நம்பும் ஒரு உன்னதமான ஜனநாயகம். யாருடைய உரிமைகள் மீறப்பட்டாலும் அவர்கள் சுதந்திரமாக நீதிமன்றத்தை நாட அரசியலமைப்பில் முழு உரிமை உண்டு. உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கை நாம் கொண்டிருந்தாலும், உலகப் பிரச்சினைகளில் ஆறில் ஒரு பங்கை நாம் கொண்டிருக்கவில்லை.
தலைநகர் டெல்லியில் மட்டுமே 200-க்கும் மேற்பட்ட செய்திச் சேனல்கள் ஆங்கிலம், இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் சுதந்திரமாக இயங்கி வருகின்றன. இந்தியாவின் பரந்து விரிந்த நிலப்பரப்பைப் பற்றி எந்தவொரு புரிதலும் இல்லாமல், ஏதோ ஒரு சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) வெளியிடும் ஒருதலைப்பட்சமான அறிக்கைகளைப் படித்துவிட்டுப் சர்வதேச அரங்கில் இவ்வாறு கேள்வி எழுப்புகிறார்கள்" என்று மறுப்பு தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்சுவால், "உங்கள் கேள்விகளை நாங்கள் குறித்துக் கொண்டோம், உரிய நேரத்தில் பதிலளிப்போம்" என்றார். ஆனால், அதற்கு அந்த நார்வே பத்திரிகையாளர், "எனக்கு இதற்கு உடனடியாக இப்போதுதான் பதில் வேண்டும்" என்று பிடிவாதம் பிடித்ததால் அங்கு இந்திய அதிகாரிகளுக்கும் அவர்களுக்குமிடையே கடுமையான வாக்குவாதமும் பரபரப்பும் நிலவியது.
இந்தியத் தூதரகம் விளக்கம் - ராகுல் காந்தி சாடல்:
இந்த விவகாரம் குறித்து நார்வேயில் உள்ள இந்தியத் தூதரகம் தனது அதிகாரப்பூர்வப் பக்கத்தில், "பிரதமரின் பயணம் தொடர்பாக இன்று இரவு 9:30 மணிக்கு 'ராடிசன் புளூ பிளாசா' ஹோட்டலில் பிரத்யேகப் பத்திரிகையாளர் சந்திப்பைத் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட செய்தியாளர் அங்கு நேரில் வந்து தனது கேள்விகளைக் கேட்டுப் தெளிவு பெறலாம்" எனப் பதிவிட்டுள்ளது.
இதற்கிடையே, இச்சம்பவத்தைக் குறிப்பிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் காரசாரமாக விமர்சித்துள்ளார். அதில், "மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றால், எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. சர்வதேசப் பத்திரிகையாளர்களின் எளிய கேள்விகளைக் கேட்டுப் பிரதமர் மோடி இவ்வாறு பீதியடைந்து ஓடுவதைப் பார்க்கும்போது, உலக அரங்கில் இந்தியாவின் மதிப்புக்கு என்ன ஆவது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி: குப்பையில் வீசப்பட்ட சீன அரசின் பரிசு பொருட்கள்!
திங்கள் 18, மே 2026 5:40:25 PM (IST)

ஐரோப்பியப் பயணம் தொடக்கம்: நெதர்லாந்து சென்றடைந்தார் பிரதமர் மோடி - உற்சாக வரவேற்பு!
சனி 16, மே 2026 12:25:34 PM (IST)

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனைத்து வர்த்தகக் கப்பல்களுக்கும் அனுமதி: ஈரான் அறிவிப்பு
வெள்ளி 15, மே 2026 4:47:36 PM (IST)

எரிசக்தி பாதுகாப்பில் புதிய மைல்கல்: பிரதமரின் யுஏஇ பயணத்தில் 5 முக்கிய ஒப்பந்தங்கள்!
வெள்ளி 15, மே 2026 3:41:49 PM (IST)

ஈரான் பதற்றத்தைத் தணிக்கச் சீனா உதவ வேண்டும்: பெய்ஜிங்கில் டிரம்ப் கோரிக்கை!
வியாழன் 14, மே 2026 5:03:08 PM (IST)

வெனிசுலாவை அமெரிக்காவுடன் இணைக்க டிரம்ப் திட்டம்: அதிபர் டெல்சி நிராகரிப்பு!
புதன் 13, மே 2026 12:37:18 PM (IST)


