» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி: குப்பையில் வீசப்பட்ட சீன அரசின் பரிசு பொருட்கள்!

திங்கள் 18, மே 2026 5:40:25 PM (IST)



அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவருடன் சென்ற உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர்களுக்குச் சீன அரசு வழங்கிய விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள் அனைத்தும், உளவுத்துறை எச்சரிக்கை காரணமாகப் பீஜிங் விமான நிலையக் குப்பைத் தொட்டியில் வீசி எறியப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது இரண்டு நாள் அதிகாரப்பூர்வச் சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று ஏர்போர்ஸ் ஒன் (Air Force One) விமானம் மூலம் வாஷிங்டன் திரும்பினார். அதிபரின் இந்தப் பயணத்தில் டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க், ஆப்பிள் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், என்விடியா (Nvidia) சிப் நிறுவனத் தலைவர் ஜென்சன் ஹூவாங் உள்ளிட்ட அமெரிக்காவின் முன்னணித் தொழில் அதிபர்கள் மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பயணத்தின் நிறைவாக, சீன அரசு அதிகாரிகள் தரப்பில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குழுவினருக்குப் பல்வேறு விசேஷப் பரிசுகளும், நினைவுப் பொருட்களும் முறைப்படி வழங்கப்பட்டன. ஆனால், டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் தங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்துப் பரிசுப் பொருட்களையும், பீஜிங் சர்வதேச விமான நிலையத்திலேயே ஆங்காங்கே இருந்த குப்பைத் தொட்டிகளில் அப்படியே வீசிவிட்டு விமானத்தில் ஏறியுள்ளனர்.

அமெரிக்க வரலாற்றில் எப்போதும் இல்லாத இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பின்னால் இருக்கும் தீவிரப் பாதுகாப்பு காரணங்களை உளவுத்துறை வட்டாரங்கள் தற்போது வெளியிட்டுள்ளன. சீன அரசு வழங்கிய மின்னணு சாதனங்கள் அல்லது கலைப் பொருட்களுக்குள் அமெரிக்கத் தொழில்நுட்ப ரகசியங்களை உளவு பார்ப்பதற்கான அதிநவீன 'ஸ்பைவேர்' (Spyware) மென்பொருட்கள், ரகசியக் கண்காணிப்பு சிப்கள் (Chips) அல்லது ஹேக்கிங் கருவிகள் ஏதேனும் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தனர்.

குறிப்பாக, உலகச் சிப் சந்தையைக் கட்டுப்படுத்தும் என்விடியா தலைவர் மற்றும் ஆப்பிள், டெஸ்லா நிறுவனத் தலைவர்களின் ரகசியத் தரவுகளைத் திருடச் சீனா திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், எவ்விதச் பரிசோதனைக்கும் இடமளிக்காமல் ஒட்டுமொத்தப் பொருட்களையும் குப்பையில் வீச டிரம்ப் உத்தரவிட்டதாகத் தெரிகிறது. இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது உலகளவில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory