» செய்திகள் - விளையாட்டு » உலகம்

புயல் வருகிறது, யாராலும் தடுக்க முடியாது – ஈரானுக்கு ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை!

வெள்ளி 1, மே 2026 11:28:03 AM (IST)

ஈரான் ஆட்சியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விடுத்துள்ள "புயல்” எச்சரிக்கை, மேற்கு ஆசியப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக நிலவும் இழுபறிக்கு மத்தியில், ஈரானை நோக்கி அமெரிக்கா தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் அமலில் உள்ள சூழலில், அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கையில் அதிநவீன துப்பாக்கியுடன் அவர் நிற்பது போன்றும், அவருக்குப் பின்புறம் குண்டுகள் வெடித்துச் சிதறுவது போன்றும் அந்தப் புகைப்படம் அமைந்துள்ளது.

அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: "அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. அந்த நாடு விரைவில் புத்திசாலித்தனமான முடிவை எடுக்க வேண்டும். இனிமேல் என்னால் பொறுமை காக்க முடியாது; தொடர்ந்து நல்லவனாக இருக்கவும் மாட்டேன்.”

இதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களில், "புயல் வந்து கொண்டிருக்கிறது. இந்த புயலை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது” என அவர் மற்றொரு பதிவை வெளியிட்டார்.

ரகசியத் திட்டம் மற்றும் ராணுவ வியூகம்

அதிபர் ட்ரம்பின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் மீது ஒரு மிகப்பெரிய தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் தயாராகி வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் முக்கிய எரிசக்தி நிலையங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

வியூக முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஈரானில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பறிமுதல் செய்ய ரகசியத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரஷ்யாவின் நிலைப்பாடு மற்றும் ஊகங்கள்

சமீபத்தில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ரஷ்ய அதிபர் புதினைச் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து, அதிபர் ட்ரம்பும் புதினும் தொலைபேசியில் ஆலோசித்தனர். இது குறித்துப் பேசிய ட்ரம்ப், ஈரானின் யுரேனியம் விவகாரத்தில் ரஷ்யா உதவும் என்று புதின் வாக்குறுதி அளித்ததாகத் தெரிவித்தார்.

இருப்பினும், ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் இதனை மறுத்துள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவிற்கு எந்தப் பரிந்துரையும் ரஷ்யா வழங்கவில்லை என்றும், உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் வெறும் ஊகங்களே என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மே 9-ஆம் தேதி ரஷ்யாவின் வெற்றி தினத்தை முன்னிட்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ட்ரம்பின் இந்த எச்சரிக்கை சர்வதேச அரசியலில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory