» செய்திகள் - விளையாட்டு » உலகம்
படைகள் வாபஸ் பெறப்பட்டன காசா போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது
சனி 11, அக்டோபர் 2025 4:30:39 PM (IST)

காசாவில், போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. ஒப்புக்கொண்ட இடத்துக்கு படைகள் வாபஸ் பெறப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது.
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே 2 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் தொடர் முயற்சிகள் காரணமாக, எகிப்து நாட்டின் ஷர்ம்-எல்-ஷேக் நகரில் இருதரப்புக்கிடையே 3 நாட்களாக பேச்சுவார்த்தை நடந்தது. அதன் முடிவில், முதல்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத்தானது.
ஒப்பந்த விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஒப்பந்தத்துக்கு டிரம்பும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று இஸ்ரேல் மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில், காசாவில் போர் நிறுத்தத்துக்கான டிரம்பின் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஹமாஸ் பிடியில் மீதி உள்ள பணயக் கைதிகள் அனைவரையும் விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தின் சுருக்கத்துக்கும் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இது, போர்நிறுத்தத்துக்கு முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.
இதுபற்றி நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், பணயக் கைதிகள் விடுவிப்புக்கான ஒப்பந்தத்தின் சுருக்கத்துக்கு இஸ்ரேல் மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. திட்டத்தின் மற்ற அம்சங்கள் குறித்து எதுவும் கூறப்படவில்லை.
சில மணி நேரங்கள் கழித்து, இஸ்ரேல் ராணுவம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. காசாவில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் உள்ளூர் நேரப்படி மதியம் அமலுக்கு வந்ததாக அறிவித்தது.
மேலும், ஒப்புக்கொண்ட இடத்துக்கு இஸ்ரேல் ராணுவம் வாபஸ் பெறப்பட்டு வருவதாகவும் அறிவித்தது. இருப்பினும், காசாவின் 50 சதவீத பகுதி, இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அதன்பிறகு வாடி காசா பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். வடக்கு நோக்கி நடக்கத் தொடங்கினர்.
இதற்கிடையே, இஸ்ரேல் மந்திரிசபை ஒப்புதலுக்கு பிறகும் வடக்கு காசாவில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதாக காசா மக்கள் குற்றம்சாட்டினர். நள்ளிரவில் இருந்தே சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடந்ததாகவும், அதிகாலையில் தீவிரம் அடைந்ததாகவும, ராணுவ விமானம் மிகவும் தாழ்வாக பறந்ததாகவும் அவர்கள் கூறினர்.
ஒரு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் பலியானார்கள். 40 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். கடந்த 24 மணி நேரத்தில், 11 பாலஸ்தீனியர்களின் உடல்களும், காயமடைந்த 49 பேரும் ஆஸ்பத்திரிக்கு வந்ததாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தரப்பில் பேச்சுவார்த்தையில் இடம்பெற்ற உயர் அதிகாரி காலில் அல்-ஹய்யா, டெலிவிஷனில் பேசினார். அப்போது, ஒப்பந்தத்தில் உள்ள சில அம்சங்களை விவரித்தார். அவர் பேசியதாவது: இஸ்ரேல் சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கும். எகிப்துடனான 5 எல்லை கடவுப்பாதைகளை திறக்கும். காசாவுக்கு உதவிப்பொருட்கள் வர அனுமதிக்கும்.
இ்ஸ்ரேல் சிறைகளில் உள்ள பெண்கள், குழந்தைகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள். போர் முடிந்து விடும் என்று டிரம்பும், மத்தியஸ்தர்களும் உறுதி அளித்துள்ளனர். இனிமேல், பாலஸ்தீன நாட்டை அமைப்பதில் நாங்கள் கவனம் செலுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை கண்காணிக்க இஸ்ரேலுக்கு 200 துருப்புகளை அனுப்பி வைக்கப்போவதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில், பணயக் கைதிகளின் குடும்பத்தினர் மது பாட்டிலை பீய்ச்சியடித்து கொண்டாடினர். சிலர் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
ஹமாஸ் அமைப்பின் பிடியில் உள்ள 48 பணயக் கைதிகளில் 20 பேர் மட்டுமே இன்னும் உயிருடன் இருப்பதாக கருதப்படுகிறது. அவர்களும், இஸ்ரேல் பிடியில் உள்ள பாலஸ்தீன கைதிகளும் 13-ந் தேதி முதல் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
பாலஸ்தீன கைதிகள் பட்டியலை இஸ்ரேல் வெளியிட உள்ளது. அவர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அவர்களது விடுதலைக்கு ஆட்சேபனை தெரிவிப்பதாக இருந்தால், 24 மணி நேரத்துக்குள் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும்.
காசாவின் பாதுகாப்புக்கு அரபு, முஸ்லிம் நாடுகளை சேர்ந்த படையினர் அடங்கிய சர்வதேச படை பொறுப்பேற்கும் என்று தெரிகிறது. சர்வதேச நிதியுதவியுடன் கூடிய மறுகட்டுமான பணிகளுக்கு அமெரிக்கா தலைமை வகிக்கும்.
இஸ்ரேல் பணயக் கைதிகளின் குடும்பத்தினருடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். பணயக் கைதிகள் 13-ந் தேதி வந்து விடுவார்கள் என்று அவர் கூறினார். டிரம்ப் பேசிய வீடியோவை அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்டு லுட்னிக் வெளியிட்டுள்ளார்.
அனுமதி கிடைத்தவுடன் காசாவில் நுழைவதற்காக 1 லட்சத்து 70 ஆயிரம் டன் மருந்துகள் மற்றும் நிவாரண பொருட்கள் தயார்நிலையில் இருப்பதாக ஐ.நா. மனிதாபிமான பிரிவு தலைவர் டாம் பிளெட்சர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

2025ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
திங்கள் 13, அக்டோபர் 2025 5:21:39 PM (IST)

வர்த்தக போரை விரும்பவில்லை; அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் - சீனா உறுதி
திங்கள் 13, அக்டோபர் 2025 12:02:17 PM (IST)

ராஜினாமா செய்த 4 நாட்களில் பிரான்ஸ் பிரதமராக செபாஸ்டியன் மீண்டும் நியமனம்
ஞாயிறு 12, அக்டோபர் 2025 11:24:27 AM (IST)

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் : ராஜ்நாத் சிங் முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 10, அக்டோபர் 2025 9:25:54 PM (IST)

வெனிசுவேலாவைச் சேர்ந்த பெண்ணுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு: டிரம்புக்கு ஏமாற்றம்!
வெள்ளி 10, அக்டோபர் 2025 4:24:43 PM (IST)

ஒன்றும் செய்யாத ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கினார்கள்: ஒபாமா மீது டிரம்ப் விமர்சனம்!!
வெள்ளி 10, அக்டோபர் 2025 11:52:07 AM (IST)
