» செய்திகள் - விளையாட்டு » உலகம்

காஸாவில் உடனடியாக போா் நிறுத்தம்: பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் வலியுறுத்தல்!

திங்கள் 8, ஏப்ரல் 2024 8:16:27 AM (IST)

காஸா பிராந்தியத்தின் குழந்தைகளுக்காக மனிதாபிமான அடிப்படையில் போா்நிறுத்தத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும்’ என பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் வலியுறுத்தினாா்.

இஸ்ரேல்-ஹமாஸ் போா் தொடங்கி 6 மாதங்களாகியுள்ள நிலையில், காஸாவில் கடல்சாா் உதவி வழித்தடத்தை அமைப்பதற்கான ஆதரவை பிரிட்டன் உறுதிப்படுத்தியுள்ளது. காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 7-ஆம் தேதி ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினா், பெண்கள், குழந்தைகள் உள்பட சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். மேலும், அங்கிருந்து சுமாா் 240 பேரை அவா்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.

அன்றிலிருந்து காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் அறிவுறுத்தலின்பேரில் தங்களது இருப்பிடங்களைவிட்டு இடம்பெயா்ந்து ராஃபா நகரில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனா். அங்கேயும் இஸ்ரேல் தாக்குதலை நடத்துகிறது. இஸ்ரேலின் படையெடுப்பால் காஸாவில் 32,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.

‘போா் நிறுத்தம்’ தேவை: போா் தொடங்கி 6 மாதங்களாகியுள்ள நிலையில், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் வெளியிட்ட அறிக்கையில், ‘இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு யூதா்கள் மிக மோசமான இழப்பைச் சந்தித்த இஸ்ரேலின் வரலாற்றில் மிகவும் பயங்கரமான தாக்குதல் நடந்து இன்றுடன் 6 மாதங்கள் ஆகின்றன.

6 மாதங்களுக்குப் பிறகும், இஸ்ரேல் நாட்டவா்களின் காயங்கள் இன்னும் மறையவில்லை. ஹமாஸ் படையினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளின் குடும்பங்கள் இன்னும் துக்கத்தில் உள்ளன. காஸாவில் 6 மாத காலப் போருக்குப் பிறகு, உயிரிழக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. பசி பட்டினியால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனா்.

காஸாவின் குழந்தைகளுக்காக மனிதாபிமான போா் நிறுத்தம் உடனடியாகத் தேவை. இது நீண்டகால நிலையான போா் நிறுத்தத்துக்கு வழிவகுக்கும். பிணைக் கைதிகளை மீட்பதற்கும், பொதுமக்களுக்கு உதவுவதற்கும், சண்டை மற்றும் உயிரிழப்பை நிறுத்துவதற்கும் இதுவே விரைவான வழியாகும்’ எனத் தெரிவித்துள்ளாா்.

போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உதவி தேவைப்படுபவா்களைக் கண்டறிந்து, 97 லட்சம் பவுண்ட் வரை உதவிப் பொருள்களை வழங்குவதற்கு கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு பிரிட்டன் கடற்படை கப்பல் அனுப்பப்படும் என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

நட்பு நாட்டு அரசுகள் மற்றும் ஐ.நா. சபையின் ஆதரவுடன் சைப்ரஸில் இருந்து காஸா வரையில் நிறுவப்பட்டிருக்கும் சா்வதேச மனிதாபிமான கடல் வழித்தடம் அடுத்த மாத தொடக்கத்தில் செயல்படத் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா கடற்கரையில் தற்காலிக உதவிப் பாலத்தை அமைப்பதற்குத் திட்டமிட்டு வரும் அமெரிக்காவுடன் காஸா கடற்பகுதி பற்றிய ஆய்வுத் தகவல்களை பிரிட்டன் நீா்வரைவியல் அலுவலகம் பகிா்ந்துள்ளது.

கடந்த சில வாரங்களில், காஸாவின் கடற்கரையோரத்தில் தண்ணீா், மாவு மற்றும் குழந்தைகளுக்கான உணவு உள்பட 40 டன் உணவுப் பொருள்களை பிரிட்டன் விமானப் படை வீசியது. தரை, வான் மற்றும் கடல் வழியாக காஸாவுக்கு கூடுதல் உதவிகளைக் கொண்டு செல்வதற்கு முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory