» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்க முடியாது: டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டம்

வெள்ளி 5, ஏப்ரல் 2024 5:25:23 PM (IST)

கச்சத்தீவை திரும்ப வழங்கினால் கடல்வளம் சூறையாடப்படும்; கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். 

இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு 1974ஆம் ஆண்டில் இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது. கடந்த சில நாட்களாக மீண்டும் இந்த கச்சத்தீவு விவகாரம் பேசுபொருள் ஆகி இருக்கிறது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல்களைப் பகிர்ந்து இருந்தார். இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடியும் கூட நேரடியாக எக்ஸ் பக்கத்தில் விமர்சித்து இருந்தார். கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், "காங்கிரஸ் செயல்பாடுகளாலேயே கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டதாக சாடினார்".

மேலும், அப்போது தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த திமுகவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் இது குறித்து மாநில அரசுக்குத் தேவையான தகவல்கள் பகிரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் - திமுகவைக் கடுமையாகச் சாடினார். மத்திய அரசு கச்சத்தீவை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை அமைச்சர் பேட்டி: கச்சத்தீவு பிரச்சினைக்கு காங்கிரஸ், திமுகதான் காரணம் என்று பாஜக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாஜக, கச்சத்தீவை மீட்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுத்து வருகின்றன. தேர்தல் அரசியலுக்காக கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலினும் கடுமையாக சாடியிருந்தார்.

கச்சத்தீவு விவகாரம் மீண்டும் தமிழக அரசியலில் அனலை கிளப்பியுள்ள நிலையில், இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகையில், "கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது. இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவு கிடைக்கப்பெற்றது. எனவே இதை திரும்ப வழங்குவது சாத்தியமற்றது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல் வளம் முற்றிலுமாக சூறையாடப்படும். 

இலங்கையில் இழுவை மடி படகு பயன்படுத்துவதற்கு தடை உள்ளது. இந்திய மீனவர்கள் இழுவைமடி படகுகளை பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்ட விரோதமாக மீன் பிடிக்கின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்களின் கடல் தொழில் உபகரணங்களும் சேதப்படுத்தப்படுகின்றன" என்றார்.


மக்கள் கருத்து

தமிழன்Apr 8, 2024 - 11:53:23 AM | Posted IP 172.7*****

அவன் திருடன் எனத் தெரிந்து விட்டது.

கந்தசாமிApr 7, 2024 - 05:30:32 AM | Posted IP 172.7*****

சீன ஆக்கிரமிப்பை திசை திருப்ப இந்த பிரச்சினை கையில் எடுக்கப்படுகிறது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory