» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை: கத்தார் நீதிமன்றம் தீர்ப்பு

வியாழன் 26, அக்டோபர் 2023 5:25:52 PM (IST)



உளவு பார்த்த புகாரில் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

இவர்கள், இந்திய போர்க்கப்பலில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்கள். பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர்கள், அல்தஹ்ரா சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் கன்சல்டன்சி சேவை என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தனர்.இந்த நிறுவனம் கத்தார் ஆயுதப்படையினருக்கு பயிற்சி மற்றும் அது தொடர்பான சேவைகளை வழங்கி வந்தது.

நீர்மூழ்கி திட்டம் தொடர்பாகவும், இஸ்ரேலுக்காகவும் உளவு பார்த்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது; இது தொடர்பான மின்னணு ஆதாரங்கள் கத்தார் அதிகாரிகள் வசம் இருப்பதாக கூறப்படுகிறது.

கைதான இந்தியர்களின் ஜாமின் மனு பல முறை தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. அவர்களின் காவலை கத்தார் அதிகாரிகள் நீட்டித்து வந்தனர். கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அவர்கள் தனிமைச்சிறையில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தண்டனை பெற்றவர்களின் விவரம்: கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கேப்டன் சவுரப் வஷிஸ்த், கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் புர்நேன்டு திவாரி, கமாண்டர் சுகுநாகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா மற்றும் செய்லர் ராகேஷ் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அல் தஹ்ரா நிறுவனத்தில் பணிபுரியும் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பை கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம். விரிவான தீர்ப்பு நகலுக்காக காத்திருக்கிறோம்.

சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் தொடர்பில் உள்ளோம். அனைத்து சட்ட வழிகளும் ஆராயப்படுகின்றன.இந்த வழக்கிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதனை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அவர்களுக்கு சட்ட ரீதியில் மற்றும் தூதரக ரீதியிலான உதவிகள் வழங்கப்படும்.

கத்தார் அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்படும். இந்த வழக்கின் நடவடிக்கைகள் ரகசியமாக உள்ளதால், இந்த நேரத்தில் மேற்கொண்டு எந்த கருத்தையும் கூறுவது சரியாக இருக்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory