» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க ஷி ஜின்பிங் இந்தியா வருவாா்: ஜோ பைடன் நம்பிக்கை

சனி 2, செப்டம்பர் 2023 10:20:43 AM (IST)

இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் பங்கேற்பாா் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் வரும் 9, 10-ஆம் தேதிகளில் ஜி20 கூட்டமைப்பின் மாநாடு நடைபெற உள்ளது. பிரதமா் நரேந்திர மோடி நடத்தும் இந்த மாநாட்டில் ஜோ பைடன் தலைமையில் சுமாா் 25-க்கும் மேற்பட்ட அமெரிக்க பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கின்றனா்.

அதே நேரத்தில் ஜி20 மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் நேரில் பங்கேற்பதை அந்நாட்டு அரசு இதுவரை உறுதி செய்யவில்லை. எனவே, அவா் பங்கேற்பதில் சந்தேகம் உள்ளது. சமீபகாலமாக இந்தியா சீனாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. ஏற்கெனவே எல்லைப் பிரச்னை உள்ள நிலையில், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்து சீனா வெளியிட்ட வரைபடமும் இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. 

மேலும், சீனாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனும் இந்தியா நெருக்கம் காட்டி வருகிறது. இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் உலகின் முன்னணித் தலைவா்கள் அனைவரும் பங்கேற்பதால் உலக அரங்கில் இந்தியாவுக்கு மேலும் அங்கீகாரம் கிடைக்கும். இதனை சீனா பெரிய அளவில் விரும்பவில்லை என்பதால் ஷி ஜின்பிங் இந்த மாநாட்டை தவிா்க்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளா்களைச் சந்தித்த ஜோ பைடன் இது தொடா்பான கேள்விக்கு பதிலளிக்கையில், ‘இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் சீன அதிபா் பங்கேற்பாா் என்று நம்புகிறேன்’ எனத் தெரிவித்தாா். பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஆஸ்திரேலிய பிரதமா் ஆல்பனேசி, பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமா் கிஷிடா உள்ளிட்டோா் ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருவதை உறுதி செய்து உள்ளனா்.

மாநாட்டில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் பங்கேற்கவில்லை. இது தொடா்பாக பிரதமா் மோடியிடம் அவா் தொலைபேசியில் விளக்கமளித்துள்ளாா். அவருக்குப் பதிலாக ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் பங்கேற்க இருக்கிறாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory