» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வாக்னர் படைத் தலைவர் திட்டமிட்டு கொலை: ரஷிய அதிபர் புதின் மீது புகார்!

வியாழன் 24, ஆகஸ்ட் 2023 3:26:19 PM (IST)

வாக்னர் படைத் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் விமான விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவரை ரஷிய அரசு திட்டமிட்டு கொலை செய்ததாக வாக்னர் படை குற்றம்சாட்டியுள்ளது.

சோவியத் யூனியனில் திருட்டு மற்றும் மோசடி வழக்கில் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவா் யெவ்கெனி ப்ரிகோஷின். சோவியத் யூனியன் சிதறிய பிறகு, ரஷியாவின் தனியாா் துணை ராணுவப் படையான வாக்னா் குழுவின் தலைவரானாா். ரஷிய அதிபா் புதினுடன் ப்ரிகோஷினுக்கு நீண்டகால நெருங்கிய நண்பராகவும் இருந்தார். உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்துடன் இணைந்து வாக்னர் குழு முக்கியப் பங்காற்றியது. 

இந்தச் சூழலில், உக்ரைனில் உள்ள வாக்னர் குழு முகாம்கள் மீது ரஷிய படைகள் ராக்கெட், பீரங்கி தாக்குதல் நடத்தியதாக ப்ரிகோஷின் குற்றஞ்சாட்டினாா். உக்ரைன் போரில் ரஷிய பாதுகாப்பு அமைச்சா் சொ்கெய் ஷோய்குவின் செயல்பாட்டை ப்ரிகோஷின் தீவிரமாக விமா்சித்து வந்தாா். அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ப்ரிகோஷின் வலியுறுத்தி வந்தாா். இந்நிலையில், ஷோய்குவை ரஷிய முப்படைத் தலைமைத் தளபதி சந்தித்ததாகவும், அந்தச் சந்திப்பில் தன்னைக் கொல்ல இருவரும் முடிவு செய்து வாக்னர் குழு முகாம்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாகவும் ப்ரிகோஷின் குற்றஞ்சாட்டினாா்.

இந்தத் தாக்குதலை தொடா்ந்து ரஷிய ராணுவத்துக்கு எதிராக ப்ரிகோஷின் ஆயுதக் கிளா்ச்சியை அறிவித்தாா். எனினும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் தனியாா் ராணுவப் படைகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்த பிரச்னைக்கு புதின் ஆதரவளித்ததே ஆயுதக் கிளா்ச்சிக்கு காரணமாக என்றும் கூறப்படுகிறது. ப்ரிகோஷினின் கிளா்ச்சி அறிவிப்பைத் தொடா்ந்து ரஸ்தாவ் மற்றும் லிபெட்ஸ் மாகாணங்களில் வாக்னா் படை நுழைந்தது. அந்தப் படை ரஸ்தாவில் உள்ள ரஷிய ராணுவ தலைமையகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 

மேலும், ரஷிய தலைநகா் மாஸ்கோ நோக்கிச் செல்லவும் வாக்னா் படை வீரா்களுக்கு ப்ரிகோஷின் உத்தரவிட்டாா். இதனால் உக்ரைனில் போரிட்டு வந்த சுமாா் 3,000 ரஷிய வீரா்கள் மாஸ்கோ வரவழைக்கப்பட்டு, அங்கு ராணுவ கவச வாகனங்கள் குவிக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, புதின் மற்றும் ப்ரிகோஷின் தரப்பில் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், தனது படை முன்னேறிச் செல்வதை நிறுத்த ப்ரிகோஷின் ஒப்புக்கொண்டாா். அத்துடன் வாக்னா் வீரா்களை உக்ரைன் முகாம்களுக்கு திரும்பிச் செல்லவும் அவா் உத்தரவிட்டாா். 

இந்நிலையில், பெலாரஸில் ப்ரிகோஷின் அரசியல் தஞ்சமடைவாா் என்றும் ரஷிய அதிபா் மாளிகை தெரிவித்தது. ஆதிக்கம் கொண்ட அதிபராக விளங்கும் புதின், ப்ரிகோஷினுடன் சமரசம் செய்தது அவர் வலுவிழப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. அதே சமயத்தில், நீண்ட நாள்கள் ப்ரிகோஷினை புதின் உயிரோடு விடமாட்டார் என்றும் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், மாஸ்கோவில் இருந்து சென்ற தனியார் வர்த்தக விமானம், புறப்பட்டு 100 கிலோ மீட்டரில் வானில் இருந்து புகையுடன் கீழே விழுந்து நொறுங்கியது.

3 விமானிகளுடன் பயணம் செய்த 7 பேரின் பட்டியலில் ப்ரிகோஷின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக ரஷிய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், ப்ரிகோஷின் சென்ற விமானத்தை திட்டமிட்டே ரஷிய விமானப் படையினர் சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என்று இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன.

இதற்கிடையே, வாக்னர் படையினர் வெளியிட்ட காணொலியில், "ப்ரிகோஷின் உயிரிழந்ததாக தகவல் பரவி வருகின்றது. அவ்வாறு அவர் உயிரிழந்தால், அதற்கு காரணம் புதின் அரசின் கொலை முயற்சிதான் என்று நேரடியாக நாங்கள் குற்றம்சாட்டுகிறோம்.” என்று தெரிவித்துள்ளனர். மேலும்,  ப்ரிகோஷின் மரணம் குறித்த தகவல் உறுதிசெய்யப்பட்டால், மாஸ்கோவை நோக்கி நீதிக்காக மீண்டும் அணிவகுப்போம் என்றும் அவர் உயிருடன் இருப்பது உங்களுக்குதான் நல்லது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல், ப்ரிகோஷின் எப்படி உயிரிழந்தார் என்று தெரியவில்லை, ஆனால் இந்த செய்தியை கேட்டு நான் ஆச்சிரியப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். ப்ரிகோஷின் மரணம் உறுதி செய்யப்பட்டால் மீண்டும் படையெடுப்போம் என்று வாக்னர் படை கூறியது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory