» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவில் நடைபெறும் ஜி 20 உச்சிமாநாட்டில் ஜோ பைடன் பங்கேற்கிறார்: வெள்ளை மாளிகை

புதன் 23, ஆகஸ்ட் 2023 4:37:43 PM (IST)

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜி 20 உச்சிமாநாட்டில் அதிபர் ஜோ பைடன் பங்கேற்கிறார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா முதன்முறையாக ஏற்றுள்ள நிலையில், அதன் உச்சிமாநாடு அடுத்த மாதம் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், ஜி 20 அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். சர்வதேச அளவில் விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.

உலக ஜிடிபியில் 75 சதவீதம், உலக வர்த்தகத்தில் 75 சதவீதம், உலக மக்கள் தொகையில் 3ல் 2 பங்கு ஆகியவற்றை பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்பாக ஜி 20 திகழ்வதால், இதன் உச்சிமாநாடு சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்த மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்பதை அந்நாடு உறுதிப்படுத்தி உள்ளது. வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரின் ஜீன் பியர், இதனைத் தெரிவித்தார். மேலும் அவர், "தூயமையான எரிசக்திக்கு மாறுவது, காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான உத்திகளை கையாள்வது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து அதிபர் பைடன் ஜி 20 தலைவர்களுடன் விவாதிப்பார். 

மேலும், உலகளாவிய பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கு ஏற்படும், வறுமைக்கு எதிராக போராடுவதற்கு ஏற்பவும் உலக வங்கி மற்றும் பலதரப்பு வளர்ச்சி வங்கிகளின் திறனை அதிகரிப்பது குறித்தம் அதிபர் விவாதிக்க உள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்கும்போது அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடியின் ஜி 20 தலைமையை பாராட்டுவார்" என தெரிவித்தார்.

ஜி 20 அமைப்பில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்ஸிகோ, ரஷ்யா, சவூதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உறுப்பு நாடுகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory