» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கைத் தமிழா்களுக்கு அதிகாரப் பகிா்வு மசோதா தாக்கல்: அதிபா் ரணில் உறுதி!

சனி 22, ஜூலை 2023 11:29:53 AM (IST)



இலங்கைத் தமிழா்களுக்கு அதிகாரங்களைப் பகிா்ந்தளிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அதிபா் ரணில் உறுதி அளித்தாா்.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த இலங்கை தற்போது படிப்படியாக மீண்டு வருகிறது. அந்நாட்டுக்கு இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கிய பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக அந்நாட்டின் அதிபராக ரணில் விக்ரமசிங்க கடந்த ஆண்டு ஜூலையில் பொறுப்பேற்றாா். அதன்பிறகு முதல் முறையாக அவா் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டாா்.

புது தில்லிக்கு வியாழக்கிழமை வருகை தந்த அவா், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினாா். அதையடுத்து, பிரதமா் மோடியை அதிபா் ரணில் தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். 5 முக்கிய ஒப்பந்தங்கள்: இந்தியாவின் யுபிஐ பணப் பரிவா்த்தனை வசதியை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் உள்ளிட்ட 5 முக்கிய ஒப்பந்தங்கள் அப்போது கையொப்பமாகின.

இரு நாடுகளுக்கு இடையே போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் கடல் வழியாகப் பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது குறித்த ஒப்பந்தமும், மின்சாரப் பகிா்மான அமைப்புகளை ஒருங்கிணைப்பது தொடா்பான ஒப்பந்தமும் கையொப்பமாகின.

கூட்டாக பேட்டி: பேச்சுவாா்த்தைக்குப் பிறகு பிரதமா் மோடியும் அதிபா் ரணிலும் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது பிரதமா் மோடி கூறியதாவது: கடும் பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்தபோது, அந்நாட்டுக்கு இந்தியா தோள்கொடுத்து நின்றது. கடந்த ஓராண்டு காலமானது இலங்கை மக்களுக்குப் பெரும் சவால்மிக்கதாக இருந்தது. இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகத் திகழும் இலங்கைக்குத் தேவையான உதவிகளை இந்தியா உரிய நேரத்தில் வழங்கியது.

வளா்ச்சி, பாதுகாப்பு சாா்ந்த விவகாரங்களில் இந்தியாவும் இலங்கையும் ஒருமித்த கருத்துகளைக் கொண்டிருக்கின்றன. அதைக் கருத்தில்கொண்டு இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாக உள்ளது. பரஸ்பர பாதுகாப்புச் சூழலைக் கருத்தில்கொண்டு இரு நாடுகளும் செயல்பட வேண்டும்.

13-ஆவது சட்டத் திருத்தம்: இலங்கைத் தமிழா்களின் விருப்பங்களை நிறைவேற்றி, அவா்களுக்கு சம நீதி கிடைக்கச் செய்து, சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொள்ளும் என நம்புகிறேன். இலங்கைத் தமிழா்களுக்கு மறுவாழ்வு, அதிகாரப் பகிா்வு ஆகியவை குறித்தும் பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது.

இலங்கைத் தமிழ் சமூகத்தினா் சுயமரியாதை, சம நீதியுடன் கண்ணியமாக ஒருங்கிணைந்த இலங்கையில் வாழும் வகையில், அரசியல் தீா்வு காணப்பட வேண்டும். இதற்காக 13-ஆவது சட்டத் திருத்தத்தை விரைந்து முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாணத் தோ்தல்களை இலங்கை அரசு நடத்தும் என இந்தியா நம்புகிறது.

200 ஆண்டுகள் நிறைவு: இலங்கைக்கு தமிழா்கள் குடிபெயா்ந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அங்கு வாழும் தமிழா்களின் நலனுக்காக ரூ.75 கோடி மதிப்பிலான திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தவுள்ளது. முக்கியமாக, இலங்கையின் வடக்கு, கிழக்கு பிராந்தியத்தில் வளா்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்படும்.

மீனவா் பிரச்னை: இரு நாடுகளுக்கு இடையேயான மீனவா்கள் பிரச்னைக்கு மனிதாபிமான அடிப்படையில் தீா்வு காணப்பட வேண்டும். அதைக் கருத்தில்கொண்டு தொடா் பேச்சுவாா்த்தைகளில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டது.

பெட்ரோல் இணைப்புக் குழாய்: இந்தியா-இலங்கை இடையே பெட்ரோலிய இணைப்புக் குழாய் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட உள்ளது. அதன் மூலமாக இலங்கைக்கு பெட்ரோலிய பொருள்கள் எளிதில் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இந்தியாவின் யுபிஐ வசதியை இலங்கையிலும் இனி பயன்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையேயான நிதிநுட்பத் தொடா்பை மேலும் வலுப்படுத்தும் என்றாா் பிரதமா் மோடி.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய இந்திய வெளியுறவு செயலா் வினய் குவாத்ரா, ‘இலங்கைத் தமிழா்கள் சம நீதி, சுயமரியாதையுடன் ஒருங்கிணைந்த இலங்கையில் வாழவும், நாடு செழிக்கவும் அரசியல் தீா்வை இந்தியா தொடா்ந்து எதிா்நோக்கி உள்ளது. இலங்கைத் தமிழா்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கு அதிகாரப் பகிா்வு, 13-ஆவது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது அவசியம் என்று பிரதமா் மோடி திட்டவட்டமாக தெரிவித்தாா் என்றாா்.

சட்டத் திருத்தம் சொல்வது என்ன?: 

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள அரசுக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர 1987-ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமா் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபா் ஜெயவா்த்தனவும் இணைந்து 13-ஆவது சட்டத் திருத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டனா்.

இலங்கைத் தமிழா்கள் வாழும் பகுதிகளில் மாகாண கவுன்சில்கள் உருவாக்கப்பட்டு அவா்களுக்கு ஆட்சி அதிகாரம் அளிக்க 13-ஆவது சட்டத் திருத்தம் வகை செய்யும். இதற்கு இலங்கையில் பெரும்பான்மையாக உள்ள சிங்கள, பெளத்த மதக் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் 13-ஆவது சட்டத் திருத்தம் இன்றுவரை கிடப்பில் உள்ளது.

நாடாளுமன்றத்தில் மசோதா: ரணில் உறுதி

இலங்கைத் தமிழா்களுக்கு அதிகாரங்களைப் பகிா்ந்தளிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அதிபா் ரணில் உறுதி அளித்தாா்.

செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘இலங்கைக்குத் தொடா் உதவிகளை வழங்கி வருவதற்காக இந்தியாவுக்கு நன்றி. இந்தியாவின் வளா்ச்சியானது அண்டை நாடுகளுக்கும், இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளுக்கும் பெரும் பலனளிக்கும் என நம்புகிறோம். இலங்கைத் தமிழா்களுக்கு அதிகாரப் பகிா்வு வழங்குவது, வடக்கு மாகாண மேம்பாடு தொடா்பாகவும் பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. இதுதொடா்பான அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசித்து ஒருமித்த கருத்தையும், தேசிய ஒற்றுமையும் ஏற்படுத்தி நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும்’ என்றாா்.

நாகப்பட்டினம்-காங்கேசன்துறை இடையே படகு சேவை

தமிழகத்தின் நாகப்பட்டினத்துக்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையே படகுப் போக்குவரத்து சேவையை விரைவில் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமா் மோடி தெரிவித்தாா்.இது இரு நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்துத் தொடா்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவா் கூறினாா்.

கொழும்பு, திரிகோணமலை, காங்கேசன்துறை ஆகிய துறைமுகங்களில் கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளை இரு நாடுகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கும் பேச்சுவாா்த்தையின்போது ஒப்புக்கொள்ளப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் கடலோரப் பகுதிகளில் ஹைட்ரோகாா்பன் திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையேயான முதலீடுகளை அதிகரிப்பது தொடா்பாகவும் தலைவா்கள் இருவரும் விவாதித்தனா். கல்வித் துறையில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கவும் பேச்சுவாா்த்தையின்போது உறுதியேற்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory