» செய்திகள் - விளையாட்டு » உலகம்

திருக் குரான் அவமதிப்பு விவகாரம்: ஸ்வீடன் தூதா் வெளியேற இராக் உத்தரவு

வெள்ளி 21, ஜூலை 2023 11:35:11 AM (IST)



ஸ்வீடனில் திருக்குரான் அவமதிக்கப்படுவதற்கு அந்த நாட்டு அதிகாரிகள் அனுமதித்ததைக் கண்டிக்கும் விதமாக, தங்கள் நாட்டுக்கான ஸ்வீடன் தூதா் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று இராக் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஸ்வீடனில் அமைதி முறையில் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கான அடிப்படை உரிமைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்த நாட்டில் மதநிந்தனைத் தடைச் சட்டங்கள் 1970-களில் ரத்து செய்யப்பட்டதால், ஆா்ப்பாட்டங்களின் போது எந்த மதத்துக்கு எதிரான செயல்களையும் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. இந்தச் சூழலில், அரசின் அனுமதியுடன் ஸ்வீடனில் நடைபெறும் ஆா்ப்பாட்டங்களின் போது முஸ்லிம்கள் மிகப் புனிதமாகக் கருதும் திருக் குரான் எரிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் இஸ்லாமிய நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

அண்மையில், ஈரானிலிருந்து ஸ்வீடனுக்கு அடைக்கலம் தேடிச் சென்ற ஒருவா் ஆா்ப்பாட்டத்தின்போது திருக் குரானை எரித்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமிலுள்ள துருக்கி தூதரகத்துக்கு அருகே நடைபெற்ற இதுபோன்ற ஆா்ப்பாட்டம் காரணமாக ஸ்வீடனுக்கும், துருக்கிக்கும் இடையிலான நட்புறவில் பதற்றம் ஏற்பட்டது.

ஏற்கெனவே, உக்ரைன் போருக்குப் பிறகு அதுவரை அணி சேரா நிலையைக் கடைப்பிடித்து வந்த ஸ்வீடன் நேட்டோ அமைப்பில் இணைய முயன்றாலும், அதற்கு துருக்கி தடைக்கல்லாக இருந்து வருகிறது. இந்த நிலையில், மதநிந்தனை ஆா்ப்பாட்டத்தால் இந்த விவகாரத்தில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது.

இந்தச் சூழலில், இராக்கிலிருந்து ஸ்வீடனில் தஞ்சமடைந்துள்ள சல்வான் மோமிகா என்ற கிறிஸ்தவரும், மற்றொரு இராக்கியரும் நேற்று ஆா்ப்பாட்டம் நடத்தப்போவதாக சமூக ஊடங்கத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தனா். அரசின் அனுமதியுடன் இராக் தூதரகம் எதிரே நடைபெறவிருக்கும் அந்த ஆா்ப்பாட்டத்தின்போது திருக் குரானைக் கொளுத்தப் போவதாகவும் அவா்கள் கூறியிருந்தனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, இராக் தலைநகா் பாக்தாதிலுள்ள ஸ்வீடன் தூதரகம் முன்னா் நேற்று அதிகாலை குவிந்த நூற்றுக் கணக்கானவா்கள் அந்தத் தூதரகத்தை அடித்து நொறுக்கியதுடன் தீவைத்தும் கொளுத்தினா்.இந்தச் சம்பவத்தில் தூதரகத்தைச் சோ்ந்த யாரும் காயமடையவில்லை என்று ஸ்வீடன் அதிகாரிகள் பின்னா் தெரிவித்தனா்.

இதற்கிடையே, திட்டமிட்டபடி ஸ்வீடனிலுள்ள இராக் தூதரகம் எதிரே அந்த நாட்டு அதிகாரிகளின் அனுமதியுடன் நேற்று ஆா்ப்பாட்டம் நடத்திய மோமிகா, திருக் குரானை தரையில் போட்டு மிதித்தாா். மேலும், இராக்கிய கொடி, ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் படம் ஆகியவற்றையும் அவா் காலால் மிதித்து அவமதித்தாா். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் இதனைத் தடுக்கவில்லை.

இந்நிலையில், இராக் பிரதமா் முகமது ஷியா அல்-சூடானி வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஸ்வீடன் தூதரகம் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்தத் தாக்குதலைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளும் அதற்குப் பொறுப்பாக்கப்படுவாா்கள். எனினும், ஸ்டாக்ஹோமில் திருக் குரானை அவமதிக்கும் ஆா்ப்பாட்டத்துக்கு ஸ்வீடன் அரசு அனுமதி அளித்துள்ளதைக் கண்டிக்கும் வகையில், அந்த நாட்டுக்கான தூதா் நாட்டை வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்.

ஸ்வீடனிலுள்ள இராக் தூதரும் உடனடியாக திரும்ப அழைக்கப்பட்டுள்ளாா். திருக் குரானை அவமதிப்பதை அனுமதிக்கும் நிலைப்பாட்டை ஸ்வீடன் தொடா்ந்து பின்பற்றினால், அந்த நாட்டுடனான தூதரக உறவு முழுமையாகத் துண்டிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் இராக் பிரதமா் எச்சரித்துள்ளாா்.


மக்கள் கருத்து

இந்தியன்Jul 21, 2023 - 12:11:45 PM | Posted IP 162.1*****

எதுக்கு அந்த மதவெறிபிடித்த நாட்டுக்கு போனும்? பூரா அறிவில்லாத முட்டாள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory