» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவில் உலகக் கோப்பை தொடர்: பாகிஸ்தான் அணி பங்கேற்குமா? உயர்மட்ட குழு நியமனம்!

புதன் 19, ஜூலை 2023 4:55:33 PM (IST)



இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்பது குறித்து பிலாவால் பூட்டோ தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவால் பூட்டோ தலைமையில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்து, இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்பது குறித்த அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து முடிவெடுக்க பணித்துள்ளார். இதில் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களும் அடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த உயர்மட்டக் குழு இந்தியா-பாகிஸ்தான் ராஜீய உறவுகள் உட்பட அனைத்து விவகாரங்களையும் பரிசீலனை செய்து விளையாட்டையும், அரசியலையும் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளதா என்பதையும், இந்தியாவில் அரசியல் சூழ்நிலை பாகிஸ்தான் வீரர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள், ஊடகங்கள், பாகிஸ்தான் மக்கள் ஆகியோருக்கு பாதுகாப்பானதுதானா போன்றவற்றையும் ஆராய்ந்து முடிவெடுக்க உள்ளது.

இந்தக் குழுவின் முடிவின் அடிப்படையில்தான் பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு வந்து உலகக் கோப்பை தொடரில் பங்கேற்குமா என்பதை பாகிஸ்தான் பிரதமர் தீர்மானிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐசிசி), இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வரியமும் (பிசிசிஐ) ஏற்கெனவே உலகக் கோப்பைக்கான அட்டவணையை அறிவித்து விட்டனர். அக்டோபர் 5-ம் தேதி உலகக் கோப்பை தொடர் தொடங்குகின்றது. இரு நாடுகளுக்கு இடையேயும் பதற்றமான உறவுகள் இருந்து வருவதால் பாகிஸ்தான் அரசு அனுமதி கொடுத்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி, இந்தியா வரும் என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.

இது தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவில் விளையாட்டுத்துறை அமைச்சர் அஹ்சான் மஜாரி, மர்யன் ஔரங்கசீப், ஆசாத் மஹ்மூத், அமின் உல் ஹக், குவாமர் ஜமான், முன்னாள் தூதரக அதிகாரி தாரிக் ஃபாத்மி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.உயர்மட்டக் குழு ஒன்று இந்தியா வந்து பாகிஸ்தான் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் மற்றும் வீரர்கள் தங்கும் விடுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்த பிறகுதான் அனுமதி குறித்த விவகாரம் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிகிறது.

இது தொடர்பாக தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் நடைபெறும் ஐசிசி கூட்டத்தில் பாகிஸ்தான் வாரிய பொறுப்புத் தலைவரும், தலைமை நடைமுறை செயலதிகாரியும் கலந்து கொண்டு இந்தியா தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானில் வந்து ஆட மறுத்து வரும் நிலையில் பாகிஸ்தான் மட்டும் ஏன் ஆட வேண்டும் என்ற கேள்வியை எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி அக்டோபர் 15-ம் தேதி நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 1,25,000 பேர் அமர்ந்து பார்க்கும் உலகின் பெரிய ஸ்டேடியம் ஆகும் அகமதாபாத். இங்குதான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

பாகிஸ்தான் அணி 2 பயிற்சிப் போட்டிகளில் ஆடுகிறது. பிறகு நெதர்லாந்து மற்றும் இலங்கையுடன் முதல் 2 உலகக் கோப்பை போட்டிகளில் மோதுகிறது. பாகிஸ்தான் அணி சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஆகிய மைதானங்களிலும் பாகிஸ்தான் விளையாடுகிறது. இந்நிலையில், அந்நாட்டு பிரதமர் அமைத்துள்ள குழுவின் ஆய்வறிக்கையின் படியே முடிவு எட்டப்படும் என்று தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory