» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வடகொரியாவில் முதல் கரோனா தொற்று: நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்

வியாழன் 12, மே 2022 12:12:03 PM (IST)வடகொரியாவில் முதல் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தி அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பெரிய அளவில் பாதிப்பு அதிகரித்தபோது ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை சீன அரசு அமல்படுத்தி தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. உலகையே ஆட்டிப்படைத்துவரும் கரோனா வைரஸ் பல நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தின. ஆனால் 15 நாடுகளில் யாரையும் தாக்கவில்லை. 

வடகொரியா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் கரோனா தாக்கம் இல்லை. அதிலும் குறிப்பாக இரும்புத்திரை நாடாக வர்ணிக்கப்படும் வடகொரியாவில் எந்த பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. வட கொரியாவில் யாருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டதாக பதிவு செய்யப்படவில்லை என உலக சுகாதார நிறுவனம் கூறியது.

ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் சீனா தயாரித்த சினோவாக் தடுப்பூசிகள் வடகொரியாவுக்கு வழங்கப்பட்டன. இதனால் சீனா தங்களுக்கு வழங்கிய சுமார் 30 லட்சம் எண்ணிக்கையிலான கரோனா தடுப்பூசிகளை வேறு நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுமாறு வடகொரியா கேட்டுக் கொண்டது. யாருக்குமே கரோனா இல்லாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்தார்.

இந்நிலையில் எளிதில் பரவக் கூடிய ஒமைக்ரான் வகை கரோனா தொற்று காரணமாக, சீனாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. தென்கொரியா மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வட கொரியாவில் முதல் கோவிட் -19 பாதிப்பு உறுதியாகியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தகவல்படி 2020 ஆம் ஆண்டின் இறுதியில் வட கொரியா 13,259 கோவிட் -19 சோதனைகளை நடத்தியது. ஆனால் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என முடிவு வந்தது. வடகொரியாவில் ஒருவருக்கு கூட கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என கூறப்பட்டு வந்தது.

பியோங்யாங்கில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் வைரஸின் மிகவும் பரவக்கூடிய ஒமைக்ரான் மாறுபாடுடன் கூடியவை என தெரிவித்தது. இதனையடுத்து அதிபர் கிம் ஜாங் உன் கரோனா பரவல் குறித்து விவாதிக்க பொலிட்பீரோ கூட்டத்தை நடத்தினார். இதில் அதிகாரிகளும் பங்கேற்றனர். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அவசரகால நெருக்கடியை அமல்படுத்துவதாக அறிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘குறுகிய காலத்திற்குள் கரோனாவை அகற்றுவதே குறிக்கோள். அவசரகால தனிமைப்படுத்துதல் திட்டத்தை அமல்படுத்துவோம். கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு நடவடிக்கைள் அமல்படுத்தப்படும். நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் மாவட்டங்களிலும் உள்ள கரோனா பகுதிகளை தனிமைப்படுத்தி வைப்பதன் மூலம் வைரஸ் பரவுவதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். அனைத்து வணிக மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளும் ஒழுங்கமைக்கப்படும். நோய் பரவுவதைத் தடுக்க ஒவ்வொரு பணிப் பிரிவும் தனிமைப்படுத்தப்படும்.’’ எனக் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory