» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி: சீனாவுக்கு, வடகொரியா தலைவர் கிம்பாராட்டு

சனி 9, மே 2020 9:17:45 AM (IST)

கரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளதாக சீனாவுக்கு, வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்க்கொல்லி கரோனா வைரஸ் தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உயிர் பலி வாங்கி வருகிறது. உலகளவில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. பலி எண்ணிக்கை விரைவில் 3 லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் கரோனாவின் கோரப்பிடியில் சிக்கி திணறி வரும் நிலையில் கரோனா வைரஸ் பரவலின் மையமாக இருந்த சீனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. 

இந்த நிலையில் கரோனா வைரசுக்கு எதிரான போரில் சீனா வெற்றி பெற்றுள்ளதாக கூறி அதிபர் ஜின்பிங்குக்கு, வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜின்பிங்குக்கு, கிம் தனிப்பட்ட முறையில் வாழ்த்து செய்தி அனுப்பியதாக வடகொரியாவின் அரசு செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது. இது பற்றி கே.சி.என்.ஏ. வெளியிட்ட செய்தியில், "கரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற சீனாவுக்கு வடகொரிய தலைவர் கிம் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் கிம்மின் உடல் நலம் குறித்து சீன அதிபர் ஜின்பிங் விசாரித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கிம், எப்போது ஜின்பிங்குக்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பினார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. கரோனா வைரசை சீனா வேண்டுமென்றே பரப்பி விட்டதாகவும், உகான் நகரில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சீனாவுக்கு பாராட்டு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. வர்த்தக ரீதியிலும், நட்பு ரீதியிலும் வடகொரியாவுக்கு சீனா மிகவும் நெருக்கமான நாடு என்பதும், தற்போது வரை வடகொரியாவில் ஒருவருக்கு கூட கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory