» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தாய்மார்களை போல தந்தையருக்கும் மகப்பேறு விடுமுறை: பின்லாந்து அரசு அறிவிப்பு

சனி 8, பிப்ரவரி 2020 5:24:30 PM (IST)

புதிதாக தந்தையாகும் ஆண்களுக்கு தாய்மார்களைப் போலவே 7 மாத காலம் வரை குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்க உள்ளதாக பின்லாந்து அரசு அறிவித்துள்ளது.

நவீன உலகில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். அரசுத்துறைகள் முதற்கொண்டு அனைத்து தனியார் துறைகளிலும் பெண்கள் பணியில் உள்ளனர். ஆனால் பெண்கள் கருவுற்று குழந்தை பெற்ற பின்னர் குறைந்தது 4 மாதங்களாவது ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, மீண்டும் பணியில் இணைவது சிக்கலாகிறது. இந்தியாவைப் பொருத்தவரை மத்திய, மாநில அரசு வேலையில் இருக்கும் பெண்களுக்கு சுமார் 1 வருட காலம் வரை மகப்பேறு விடுப்பு ஊதியத்துடன் வழங்கப்படுகிறது. 

ஆனால் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கு இந்த சலுகை கிடைப்பது அரிதே. உலக நாடுகள் அனைத்திலும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. ஸ்வீடன், நார்வே, ஐஸ்லாந்து, ஹங்கேரி, எஸ்டோனியா போன்ற ஐரோப்பிய நாடுகளில் தந்தையர்களுக்கும் ஊதியத்துடன் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படுகிறது. ஊதியக்கொள்கையில் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் வழங்கப்படும் இந்த தந்தையர் விடுப்பு 4 வாரங்கள், 3 வாரங்கள், 2 வாரங்கள் என ஒவ்வொரு நாட்டிலும் வேறுபடுகிறது. 

பின்லாந்து நாட்டில் ஏற்கனவே தந்தையர்களுக்கு 2 மாதம் 14 நாட்கள் வரை குழந்தை பராமரிப்பு விடுப்பு ஊதியத்துடன் வழங்கப்படுகிறது. இந்நிலையில், குழந்தை பராமரிப்பு விடுப்புக் காலத்தை மேலும் நீட்டிப்பதற்கான திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பின்லாந்தின் சுகாதாரம் மற்றும் சமூகநலத்துறை அமைச்சகத்தின் மந்திரி அய்னோ-கைசா கூறுகையில் ‘புதிதாக தந்தையாகும் ஆண்களுக்கு தாய்மார்களைப் போலவே 7 மாத காலம் வரை குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்குவதற்கான திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. 

இந்த தீவிர சீர்திருத்தத்தின் நோக்கம் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதும், பின்லாந்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதும் ஆகும். இது பெற்றோர்களிடையே சிறந்த சமத்துவத்திற்கும், குடும்பங்களிடையே பன்முகத்தன்மைக்கும் உதவும். மேலும் ஆண்கள் தங்களது குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் அதிக நேரம் செலவிட இது உகந்ததாக இருக்கும்’ என தெரிவித்தார்.  இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த வலதுசாரி அரசாங்கம் கடந்த 2018-ல் பெற்றோர் விடுப்பில் சீர்திருத்தங்கள் கொண்டுவர முயற்சித்தது. ஆனால் அதிக செலவை காரணம் காட்டி, கடைசியில் இந்த திட்டம் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory