» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் : டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு விஜய் ஆஜர்

திங்கள் 12, ஜனவரி 2026 12:52:01 PM (IST)


கரூரில் நடைபெற்ற பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று ஆஜரானார்.

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அங்கு வைத்து புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா, மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கடந்த நவம்பர் மாதம் விசாரணை நடைபெற்றது.இதைத்தொடர்ந்து அவர்களுக்கு சம்மன் அனுப்பி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திலும் கடந்த மாதம் 3 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஜய்யின் பிரசார வாகனத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே பார்வையிட்டு சென்ற நிலையில், அந்த வாகனத்தை கரூருக்கு வரவழைத்து பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து நேற்று முன்தினம் விசாரணை நடத்தினார்கள். பிரசார வாகன டிரைவரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டன.விசாரணை முடிந்தவுடன் பிரசார வாகனத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் திரும்ப ஒப்படைத்தனர்.

கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் விஜய்யின் பெயர் இல்லை. எனினும் அவரிடமும் விசாரணை நடத்துவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர்.இந்தநிலையில் விசாரணையின் தொடர்ச்சியாக த.வெ.க. தலைவர் விஜயையும் நேரில் அழைத்து விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பியது. இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் காலை 11 மணிக்கு அவர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த சம்மனை ஏற்று சிபிஐ முன் ஆஜர் ஆவதற்காக விஜய் இன்று காலை 6 மணியளவில் தனது பனையூர் வீட்டில் இருந்து டெல்லி புறப்பட்டார். தனி விமானத்தில் விஜய் டெல்லி சென்றார்.

காலை 10.30 மணியளவில் விஜய், டெல்லி சென்றடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் சிபிஐ அலுவலகத்திற்கு செல்கிறார். விஜய் வருகையை ஒட்டி சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள ஒரு பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. ஒய் பிரிவு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட விஜய், சிபிஐ முன்பு விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். விஜய்யிடம் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory