» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெண்ணை எரித்துக் கொன்று நகையை பறித்த போலீஸ்காரர் மனைவி: பரபரப்பு தகவல்கள்

ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:48:43 AM (IST)

கேரளத்தில் பங்கு வர்த்தக நஷ்டத்தை சமாளிக்க பெண்ணை எரித்துக் கொன்று நகையை பறித்த போலீஸ்காரரின் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே கீழ் வாய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் லதா குமாரி (61). இவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருடைய வீட்டின் அருகே உள்ள ஒரு குடியிருப்பில் காவலர் குடும்பமும் வசித்து வந்தது. அதாவது போலீஸ்காரரின் மனைவி சுமையா (46), பக்கத்து வீடு என்ற முறையில் லதா குமாரியிடம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

பிறகு அவரிடம் சென்று அடிக்கடி பணம் கேட்டுள்ளார். பணம் இல்லையென்றதும், உங்களுடைய நகையை அடகு வைத்து தாருங்கள் என சுமையா கூறியுள்ளார். இந்த மிரட்டல் தொனியிலான பேச்சு லதாகுமாரிக்கு பிடிக்கவில்லை. இனி இதுபோன்று பணம் கேட்டு நச்சரிக்காதீர்கள் என மறுத்து விட்டார். இது சுமையாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

சம்பவத்தன்று லதா குமாரியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த சுமையா, அங்கு அவரை கட்டிப் போட்டார். பிறகு சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை திணித்து அமுக்கினார். அதோடு நின்று விடாமல் அவர் அணிந்திருந்த 5 பவுன் நகைகளை பறித்தார்.

நகையுடன் ஓடி விட்டால், கொள்ளையடித்த விவரம் போலீசாருக்கு தெரியவரும். எனவே லதாகுமாரியை உயிரோடு எரித்துக் கொன்று விடலாம் என்ற கொடூர முடிவுக்கு வந்தார். அதன்படி அவரை எரித்து விட்டு தப்பிச் சென்றார். ஆனால் லதாகுமாரி பலத்த காயங்களுடன் உயிருக்காக போராடினார்.

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சமயத்தில் லதாகுமாரி, பத்தனம்திட்டா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சுமையா தீ வைத்து எரித்ததை தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சுமையாவை கைது செய்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில், பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க சுமையா, லதாகுமாரியின் நகைக்கு ஆசைப்பட்டு அவரை எரித்ததை போலீசாரிடம் ஒப்புக் கொண்டார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி லதாகுமாரி நேற்று பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory