» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காசா போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் முயற்சி: பிரதமர் மோடி வரவேற்பு

செவ்வாய் 30, செப்டம்பர் 2025 4:51:50 PM (IST)

காசா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தை நிர்வகித்துவரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பாலஸ்தீனம் மீது போர் அறிவித்து தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார். சுமார் 2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப்போரில் 60 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். போரை முடிவுக்கு கொண்டுவர உலகநாட்டு தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது.

இந்தநிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்தாண்டில் 4-வது முறையாக நேற்று அமெரிக்கா சென்றார். அப்போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். வெள்ளை மாளிகையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் காசா போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் சார்பில் தீவிர அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காசாவில் அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்ட பல கட்ட முயற்சிக்குப்பின், காசா போர் நிறுத்தத்துக்காக டிரம்ப்பால் முன்மொழியப்பட்ட முக்கியமான 20 நிபந்தனைகளை உள்ளடக்கிய விரிவான திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனையடுத்து, ஹமாஸ் அமைப்பின் சம்மதத்தை எதிர்நோக்கி சர்வதேச சமூகமும் காத்திருக்கிறது.

முன்னதாக பத்திரிகையாளர்களிடம் டிரம்ப் பேசியபோது, "இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்றில் இது முக்கியத்துவம் வாய்ந்தவொரு நாள். காசா போரை முடிவுக்கு கொண்டு வரும்நேரம் வந்துவிட்டது” என தெரிவித்தார். இதனால் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதற்காக நடவடிக்கைகள் தொடங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காசா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான விரிவான திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததை இந்தியா வரவேற்கிறது. 

இது பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய மக்களுக்கும், பரந்த மேற்கு ஆசிய பிராந்தியத்திற்கும் நீண்டகால நிலையான அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஒரு சாத்தியமான பாதையை வழங்கும். டிரம்பின் முன்முயற்சிக்கு இருதரப்பினரும் ஒன்றிணைந்து மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியைப் பாதுகாப்பதற்கான முயற்சியை ஆதரிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory