» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பணியாளர்களை துன்புறுத்திய வழக்கில் இந்துஜா குடும்பத்தினருக்கு தலா 4 ஆண்டு சிறை!

ஞாயிறு 23, ஜூன் 2024 9:18:56 AM (IST)

வீட்டு பணியாளர்களை துன்புறுத்திய வழக்கில் இந்துஜா குடும்பத்தினருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சுவிட்சர்லாந்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

உலகின் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றான இந்துஜா குழுமம் ஆட்டோமொபைல், வங்கி, ஐடி, சுகாதாரம், பொழுதுபோக்கு, ரியல் எஸ்டேட் என பல துறைகளில் ஈடுபட்டு வருகிறது. ஆசியாவின் முதல் 20 பணக்கார குடும்பங்களில் ஒன்றாக இந்துஜா குடும்பம் விளங்குகிறது. இந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் மற்றும் அவரது மனைவி கமால், அவர்களின் மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதா ஆகியோர் சுவிட்சர்லாந்தில் வசிக்கின்றனர்.

இவர்கள் இந்தியர்கள் சிலரை சட்டவிரோதமாக சுவிட்சர்லாந்துக்கு அழைத்து சென்று வீட்டு பணியாளர்களாக வேலைக்கு அமர்த்தியதாகவும், அந்த பணியாளர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கி, அதிக நேரம் வேலை செய்ய வைத்து அவர்களை துன்புறுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக பிரகாஷ், அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் என 4 பேர் மீதும் மனித கடத்தல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கு சுவிட்சர்லாந்து கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கின் இறுதி விசாரணை நடத்தது. இந்துஜா குடும்பத்தினர் நேரில் ஆஜராகாத நிலையில் அவர்களின் சார்பில் 3 வக்கீல்கள் ஆஜராகி வாதாடினர். விசாரணையின்போது பாதிக்கப்பட்ட பணியாளர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், "இந்துஜா குடும்பத்தினர் தங்கள் வீட்டு வளர்ப்பு நாய்க்கு நாள் ஒன்றுக்கு ரூ.2,217 செலவு செய்கின்றனர். அதே சமயம், வீட்டு பெண் பணியாளருக்கு நாளொன்றுக்கு 18 மணி நேரம் வேலை செய்வதற்கு ரூ.660 மட்டுமே வழங்கினர். 

மேலும் பணியாளர்கள் இந்தி மொழி மட்டுமே பேச வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளனர். மேலும் பணியாளர்களின் பாஸ்போர்ட்டை பறித்து வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டி வேலை வாங்கியுள்ளனர்” என்று குற்றம் சாட்டினர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை வழங்கினர். அதன்படி மனித கடத்தல் குற்றச்சாட்டில் இந்துஜா குடும்பத்தினர் 4 பேரும் விடுவிக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

அதே சமயம் பணியாளர்களை துன்புறுத்தியது உள்ளிட்ட மற்ற குற்றச்சாட்டுகளில் 4 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்த நீதிபதிகள், பிரகாஷ் மற்றும் அவரது மனைவி கமாலுக்கு தலா 4½ ஆண்டுகளும், அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதாவுக்கு தலா 4 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.

பணியாளர்களை துன்புறுத்திய வழக்கில் இந்திய தொழில் அதிபர் குடும்பத்தினருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே சுவிட்சர்லாந்து கோர்ட்டு வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக இந்துஜா குடும்பத்தினரின் வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory