» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடகவில் நேகா கொலை சம்பவத்தை கண்டித்து பா.ஜனதா போராட்டம்

செவ்வாய் 23, ஏப்ரல் 2024 8:23:54 AM (IST)



நேகா கொலை சம்பவத்தை கண்டித்து நேற்று கர்நாடகம் முழுவதும் பா.ஜனதா சார்பில் போராட்டம் நடந்தது. அதுபோல் உப்பள்ளியில் முஸ்லிம் வியாபாரிகளும் நேகாவின் சாவுக்கு நியாயம் கேட்டு கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் வித்யாநகர் பகுதியில் வசித்து வருபவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் தார்வார்-உப்பள்ளி மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்து வருகிறார். இவரது மனைவி கீதா. இவர்களது மகள் நேகா ஹிரேமட்(23). இவர் உப்பள்ளியில் உள்ள பி.வி.பி. தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. படித்து வந்தார். கடந்த 18-ந் தேதி இவர் வழக்கம்போல் காலையில் வீட்டில் இருந்து தனது கல்லூரிக்கு சென்றார். கல்லூரியில் நடந்த தேர்வை எழுதிவிட்டு, கல்லூரி வளாகத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த பெலகாவி மாவட்டம் முனவள்ளி பகுதியைச் சேர்ந்த பயாஜ்(23) என்ற வாலிபர் நேகாவை வழிமறித்து தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி படுகொலை செய்தார். அவரை கொலை நடந்த ஒரு மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கர்நாடகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருதலை காதல் விவகாரத்தில் நேகா கொலை செய்யப்பட்டதாக ஒரு தரப்பினரும், லவ் ஜிகாத் முறையில் அவர் கொல்லப்பட்டதாக பா.ஜனதாவினரும் குற்றம்சாட்டினர்.

ஆனால் பயாஜுடனான காதலை கைவிட்டதால் நேகாவை, பயாஜ் கொலை செய்ததாக மாநில அரசு சார்பில் கூறப்பட்டது. இதற்கிடையே நேகாவும், பயாஜும் ஒன்றாக சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேகா கொலை வழக்கு விசுவரூபம் எடுத்த நிலையில் நடிகர், நடிகைகள், இந்து அமைப்பினர் உள்பட பல்வேறு தரப்பினரும் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் பா.ஜனதா, அகில பாரத வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பினர் உள்ளிட்டோரும் நேகாவின் கொலைக்கு நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பயாஜின் தாய் மும்தாஜ், அவரது தந்தையும், ஆசிரியருமான பாபா சாகேப் சுபானி ஆகியோரும் பயாஜுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் நேகாவின் கொலையை கண்டித்து நேற்று கர்நாடகம் முழுவதும் பா.ஜனதா சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் விஜயேந்திரா அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று பெங்களூரு, சிக்கமகளூரு, மைசூரு, துமகூரு, பெலகாவி, தார்வார் பல்லாரி, பாகல்கோட்டை, கலபுரகி உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கொலையாளியின் உருப்படத்தை எரித்தனர்.

சாலைகளில் டயர்களை கொளுத்திப் போட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் நேகாவின் உருவப்படம் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி ஊர்வலம் நடத்தி அவரது சாவுக்கு நியாயம் கேட்டு கோஷங்கள் எழுப்பினர். சாலைமறியல், தர்ணா போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அப்போது கொலையாளியை தூக்கிட வேண்டும் என்றும், இதுதொடர்பாக மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டு என்றும் கோரினர்.

இந்த வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தி வருவதாகவும், இதற்காக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோரை கண்டித்தும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.குறிப்பாக உப்பள்ளியில் நேற்று நேகா படித்து அந்த கல்லூரியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் இந்த கொலை சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கொலையாளிக்கு தூக்கு தண்டனை வழங்க கோரி ஆவேசமாக கோஷமிட்டனர்.

இதற்கிடையே அஞ்சுமான் இஸ்லாமிக் கமிட்டி என்ற முஸ்லிம் அமைப்பு நேகா கொலை சம்பவத்தை கண்டித்தும், கொலையாளிக்கு உரிய தண்டனை வழங்க கோரியும் தார்வாரில் அரைநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து அழைப்பு விடுத்து இருந்தது. அதன்படி நேற்று தார்வாரில் அரைநாள் முழுஅடைப்பு நடந்தது. ஏராளமான கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. தொழிற்சாலைகளும் மூடப்பட்டு இருந்தது.

குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த வியாபாரிகள் அனைவரும் கடைகளை அடைத்து இருந்தனர். அவர்கள் தங்களின் கடைகளின் முன்பு நேகாவின் உருவப்படம் அடங்கிய பேனரை கட்டி இருந்தனர். அதில் நேகாவின் கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அச்சிடப்பட்டு இருந்தது. காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை இந்த கடையடைப்பு போராட்டம் நடந்தது.

உப்பள்ளியில் முஸ்லிம் பெண்கள் நேகா கொலைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ‘தவறு யார் செய்தாலும், தவறு தான். இதில் இந்த சமுதாயம், அந்த சமுதாயம் என்ற வேறுபாடு இல்லை. சட்டம் அனைவருக்கும் சமம். கொலையாளி, முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவன் என்பதால் நாங்கள் தலைகுனிகிறோம்.இதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் குற்றம்சாட்டுவது ஏற்க முடியாத ஒன்று. கொலையாளிக்கு சட்டப்படி அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். நேகாவின் பெற்றோருடன் நாங்கள் இருக்கிறோம்’ என்று கூறினர்.

இந்த நிலையில் சிவமொக்காவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்-மந்திரி சித்தராமையா நேகா கொலை வழக்கை சி.ஐ.டி.(சிறப்பு விசாரணை குழு) விசாரணைக்கு மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் இவ்வழக்கை விசாரித்து விரைவில் தீர்ப்பு வழங்க சிறப்பு கோர்ட்டும் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்து இருக்கிறார்.பா.ஜனதா, ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து நேகாவின் கொலைக்கு கண்டனம் தெரிவித்து வந்ததாலும், எதிர்ப்பு வலுத்ததாலும் இக்கொலை வழக்கு சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற கர்நாடக அரசு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

உண்மApr 23, 2024 - 09:29:30 AM | Posted IP 162.1*****

இந்தியாவில் நிறைய சில இஸ்லாமிய வாலிபர்களால் ஏமாற்றப்பட்டு பல வாலிப இந்துப்பெண்கள் பலியாகி விடுகிறார்கள். இந்தியா மட்டுமல்ல பாகிஸ்தானிலும் கூட. திருந்தாத ஜென்மங்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory