» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முதல் முறையாக ஓட்டுப்போட்ட ஆதிவாசிகள்: 7 மாநிலங்களில் 72% வாக்குப்பதிவு!

செவ்வாய் 23, ஏப்ரல் 2024 8:15:23 AM (IST)



7 சகோதரி மாநிலங்களில் 72 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளது. மேலும் தேர்தல் வரலாற்றிலேயே அந்தமானில் உள்ள ஆதிவாசிகள் முதல் முறையாக ஓட்டுப்போட்டனர்.

நாடு முழுவதும் முதல் கட்ட வாக்குப்பதிவு, 21 மாநிலங்களில் உள்ள 102 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த 19-ந் தேதி தேர்தல் நடந்து முடிந்து இருக்கிறது. அதில் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபர் தீவுகள், அருணாச்சல பிரதேசம், லட்சத்தீவு, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்து முடிந்து விட்டது. மற்ற பகுதிகளில் பகுதியாக நடந்து இருக்கிறது. 2-ம் கட்டமாக வெளிப்புற மணிப்பூரில் மீதமுள்ள இடங்களுக்கு 26-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

இதுதவிர 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்பு ஜம்மு காஷ்மீரில் நடக்கும் முதல் நாடாளுமன்ற தேர்தல் என்பதால் உலகம் முழுவதும் கவனம் பெற்றது. அங்குள்ள 5 தொகுதிகளில் உத்தம்பூர் தொகுதியில் மட்டும் நடந்த முதல் கட்ட தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அங்குள்ள தாத்காகி என்ற கிராமத்தில் உள்ள 35 சதவீத மக்கள் காதுகேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களாக உள்ளனர். அவர்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் அங்கு கூடுதல் ஊழியர்களை நியமித்து சிறப்பு நடவடிக்கைகளை எடுத்தது. அதனால் அங்கு வாக்கு சதவீதம் அதிகரித்து இருந்தது.

அதேபோல் முதல் கட்ட தேர்தலில் ஆதிவாசி மக்களின் வாக்குப்பதிவை அதிகரிக்க தேர்தல் ஆணையம் எடுத்த சில சிறப்பு நடவடிக்கைகள் நல்ல பலனை தந்து இருக்கிறது. அந்தமான் தீவில் உள்ள சோம்பென் ஆதிவாசி மக்கள் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த தேர்தலில் வாக்களித்து இருக்கின்றனர். மக்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் வசித்து வரும் அவர்களை தேர்தல் அதிகாரிகள் ஒருங்கிணைத்து 84 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கி நாடாளுமன்ற தேர்தல் குறித்து எடுத்துரைத்தனர். அதில் 6 பேர் வந்து ஓட்டுப்போட்டு, புகைப்படமும் எடுத்து சென்றனர். மேலும் அங்கு முதல் முறையாக ஒங் ஆதிவாசிகள் 68 பேரில் 63 பேரும், கிரேட் அந்தமான் ஆதிவாசிகள் 39 பேரில் 33 பேரும் வாக்களித்து இருக்கிறார்கள்.

இதுதவிர நாடு முழுவதும் ஆதிவாசிகள் வசிக்கும் பகுதிகளில் அவர்களின் வீடுகள் போன்றே வாக்குச்சாவடி மையங்களையும் தேர்தல் ஆணையம் அமைத்து இருந்தது. குறிப்பாக நாகாலாந்தில் நாகா மொருங்க், மராட்டியத்தில் உள்ள மாடியா இன மக்களின் வீடுகளை போன்று அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிகள் அனைவரையும் கவர்ந்து இழுத்தது. மேலும் இந்த தேர்தலில் பெண்கள் மட்டுமே பணியாற்றிய பிங்க் வாக்குச்சாவடிகள், சிகப்பு கம்பளத்துடன் அலங்கரிக்கப்பட்டு இருந்த மாதிரி வாக்குச்சாவடிகள் நல்ல முயற்சியாகும்.

முன்பு எப்போதும் இல்லாத வகையில் 7 சகோதரி மாநிலங்கள் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் 72 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. அருணாசல பிரதேசத்தில் 78.19 சதவீதம், அசாமில் 78.25, திரிபுரா 81.48, மணிப்பூரில் 75.17 சதவீதம், மேகாலயாவில் 76.60, நாகாலாந்தில் 57.72, மிசோரமில் 56.87 ஆகிய சதவீதத்தில் வாக்குகள் பதிவானது. மற்றொரு வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் 79.91 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை படைக்கப்பட்டது.

மேலும் நக்சலைட்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள சத்தீஷ்கார் மாநிலத்தின் பஸ்தார் மாவட்டத்தில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வசதியாக முதல் முறையாக அங்குள்ள 56 கிராமங்களிலேயே வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு இருந்தது. அதனால் அந்த தொகுதியில் வாக்குசதவீதம் 68 சதவீதமாக அதிகரித்துள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்டத்தில் ஓரிரு சம்பவங்களை தவிர தேர்தல் மிக அமைதியாக நடந்து முடிந்து இருக்கிறது. 2-ம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு வருகிற 26-ந் தேதி நடைபெற இருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory