» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சூரத் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

திங்கள் 22, ஏப்ரல் 2024 5:55:52 PM (IST)



குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். 

குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த நிலேஷ் கும்பானி என்ற காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்த சுயேச்சைகள் உள்பட 8 வேட்பாளர்களும் மனுவை வாபஸ் பெற்றனர். இதனையடுத்து, பாஜக வேட்பாளர்முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து குஜராத் பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் தனது எக்ஸ் தள பதிவில், "முகேஷ் தலாலுக்கு வாழ்த்துகள். அவர் போட்டியின்றி சூரத் மக்களவைத் தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு குஜராத்தின் சூரத் தொகுதி முதல் தாமரையைத் தந்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

வேட்புமனு நிராகரிப்புக்குக் காரணம் என்ன? - காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவை மூவர் முன்மொழிந்திருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருக்க, அந்த மூவரும் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அதில் இடம்பெற்றிருக்கும் கையெழுத்து தங்களுடையது அல்ல எனக் கூறினராம். இதனையடுத்து போலி கையெழுத்து குற்றத்துக்காக வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் அலுவலர் சவுரப் பார்தி அறிவித்திருந்தார். இந்நிலையில் முகேஷ் தலாலுக்கு வெற்றிச் சான்றிதழும் அளிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு ஒரே கட்டமாக மே 7-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. குஜராத் தேர்தலை ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டாக எதிர்கொள்கின்றன. 26 தொகுதிகளில் 24 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்திருந்தது. பாவ்நகர், பாருச் தொகுதிகளில் களம் காண்கிறது. இந்நிலையில், சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். சூரத் தொகுதியில் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வானதால் எஞ்சியுள்ள தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெறும்.

காங்கிரஸ் கண்டனம்: 

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக சூதாட்டம் நிகழ்த்தியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். 1984-ஆம் ஆண்டு முதல் மக்களவைத் தேர்தல்களில் சூரத், காங்கிரஸின் வெற்றித் தொகுதியாக இருந்துள்ளது என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

"நமது தேர்தல்கள், ஜனநாயகம், பாபா சாஹேப் அம்பேத்கரின் அரசியல் சாசனம் என அனைத்துமே அச்சுறுத்தலின் கீழ் உள்ளன. இதுதான் நம் வாழ்நாளின் மிக முக்கியமான தேர்தல்” என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். குஜராத் காங்கிரஸ் வழக்கறிஞரோ, ‘இந்தத் தேர்தல் வெற்றிக்கு எதிராக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory