» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மணிப்பூர் நாடாளுமன்ற தேர்தலில் வன்முறை : துப்பாக்கி சூடு சம்பவங்களால் பதற்றம்

சனி 20, ஏப்ரல் 2024 8:48:05 AM (IST)



மணிப்பூரில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது துப்பாக்கி சூடு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களால் பதற்றம் ஏற்பட்டது.

மெய்தி, குகி இனத்தினருக்கு இடையே கடந்த ஓராண்டாக நீடித்து வரும் கலவரத்தால் மணிப்பூர் மாநிலம் தொடர்ந்து பதற்றத்தில் உள்ளது. இந்த பரபரப்பான சூழலில் அங்கு நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளும் நடந்து வந்தன. மக்கள் அமைதியாக ஜனநாயக கடமை ஆற்றுவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் செய்து வந்தது.

மாநிலத்தில் உள் மணிப்பூர் மற்றும் வெளி மணிப்பூர் என 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், அவற்றுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. மாநிலத்தில் மொத்தமுள்ள 60 சட்டசபை தொகுதிகளில் 32 இடங்கள் உள் மணிப்பூரிலும், மீதமுள்ள 28 தொகுதிகள் வெளி மணிப்பூரிலும் அடங்கி உள்ளன.

இதில் உள் மணிப்பூர் தொகுதிக்கும், வெளி மணிப்பூர் தொகுதியில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. மாநில போலீசார் மற்றும் ஆயிரக்கணக்கான துணை ராணுவ படையினருடன் கூடிய வரலாறு காணாத பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த தேர்தலில் வாக்களிக்க மெய்தி இனத்தினரிடையே ஆர்வம் காணப்பட்டாலும், குகி பிரிவினரிடையே அதிக ஆர்வம் இல்லை. இதனால் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் மந்தமான வாக்குப்பதிவே காணப்பட்டது. வெளி மணிப்பூர் தொகுதியில் இந்த பிரிவினரே அதிகமாக வசித்து வருகின்றனர். இந்த தொகுதிக்கு உட்பட்ட காங்போபி மாவட்டத்தின் சைது, சைகுல் சட்டசபை தொகுதிகளில் பகல் 1 மணி வரை முறையே 13.22 சதவீதம், 8.58 சதவீதம் என்ற அளவிலேயே வாக்குகள் பதிவாகி இருந்தன.

இதற்கிடையே தேர்தலையொட்டி பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. அந்தவகையில் பிஷ்ணுபூர் மாவட்டத்தின் தம்னபோபியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் துப்பாக்கிகளுடன் நுழைந்த ஒரு கும்பல் வானத்தை நோக்கி பலமுறை சுட்டனர். இதனால் அதிர்ச்சியில் உறைந்த வாக்காளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இதைப்போல ஏராளமான வாக்குச்சாவடிகளில் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர்கள், குறிப்பிட்ட ஒரு கட்சியின் தேர்தல் முகவர்களை மிரட்டி வெளியேற்றினர். இம்பால் மேற்கு மாவட்டத்தின் இரோயிஷெம்பா உள்பட வாக்குச்சாவடியில் இந்த கும்பலின் மிரட்டலால் ஆத்திரமடைந்த வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து தேர்தல் பொருட்கள் மற்றும் உபகரணங்களை சூறையாடி அழித்தனர்.

இம்பால் கிழக்கு மாவட்டத்தின் கியாம்கெய்யில் உள்ள வாக்குச்சாவடியில் துப்பாக்கியுடன் நுழைந்த கும்பல் ஒன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் முகவர்களை மிரட்டி வெளியேற்றியது. இதைப்போல பல இடங்களில் ஆயுதம் தாங்கிய கும்பல்களுக்கும், வாக்காளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் நாசப்படுத்தப்பட்டன.

இவ்வாறு வன்முறை சம்பவங்களில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இந்த பகுதிகளில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு வன்முறையாளர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். இந்த சம்பவங்களால் பல இடங்களில் பரபரப்பும், பதற்றமும் நிலவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory