» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிறப்பு சான்றிதழில் பெற்றோரின் மதத்தையும் பதிய வேண்டும்: மத்திய அரசு புதிய உத்தரவு

வெள்ளி 5, ஏப்ரல் 2024 5:34:52 PM (IST)

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயருடன் பெற்றோரின் "மதத்தையும்" பதிய வேண்டும் என்று மத்திய அரசு புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. 

ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டுகளை போலவே, பிறப்பு சான்றிதழ்களும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே, அது முழுமையான சான்றிதழாகும். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல், ஆதார் அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட அரசு வழங்கும் அடையாள அட்டைகளை பெறுவது வரை, இந்த பிறப்புச்சான்றிதழ் கட்டாயமாக தேவைப்படுகிறது.

குழந்தைகள் பிறந்ததுமே, இந்த சான்றிதழை மருத்துவமனை நிர்வாகமே பதிவு செய்து பெற்றோரிடம் தந்து விடுகிறது. குழந்தையின் பெயரை மட்டும் நாம் பிறப்பு பதிவாளரிடம் சென்று தேவையான ஆவணங்களை அளித்து சேர்த்து கொள்ளலாம். எனவே, 14 நாள்களுக்குள் ஒவ்வொரு பிறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும்..

சமீபத்தில், முக்கிய சேவைகள் அனைத்திற்கும் பிறப்பு சான்றிதழ்கள், ஒரே ஆவணமாகியிருக்கிறது.. பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், இந்த சட்டம், திருத்தத்துடன் சமீபத்தில் அமலாக்கப்பட்டது. அதன்படி, இனிமேல், பிறப்பு சான்றிதழை முக்கியமான ஆவணமாக அனைவராலுமே பயன்படுத்த முடியும். அத்துடன், ஆன்லைன் மூலமாகவும், மத்திய அரசின் தளங்களில் இந்த சான்றிதழை டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

கிட்டத்தட்ட ஆதார் கார்டுகளை எப்படி ஆவணமாக பயன்படுத்துகிறோமோ அதேபோலவே இதையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்நிலையில், இந்தியாவில் பிறந்த ஒரு குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெறுவதில், தாய், தந்தை இருவரின் மதத்தை தெரிவிப்பது கட்டாயம் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோரின் மதத்தையும் தெரிவிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது. மேலும் குழந்தையை தத்தெடுக்கும் பெற்றோருக்கும் இந்த விதிகள் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகளின் தேசிய தரவுத் தளத்தை பராமரிக்க பதிவாளர் ஜெனரலுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறை மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இது முழுக்க முழுக்க புள்ளிவிவரத்துக்கானது, பெற்றோரின் மதம் என்பது புள்ளிவிவர தகவலுக்காக பெறப்படுகிறது என்று மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அந்த விளக்கத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது, "இதன் மூலம் ஒருவரின் பிறப்பு, இறப்பு தரவுகள் தேசிய அளவில் பராமரிக்கப்படும். இந்த தேசிய தரவு தளத்தினை பராமரிக்கும் அதிகாரம் பதிவாளர் ஜெனரலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களின் சேர்க்கை, ஓட்டுநர் உரிமை, அரசு பணிகளுக்கான நியமனம், திருமணங்கள் பதிவு போன்ற ஆவணங்களை விண்ணப்பிக்கும்போது பிறப்புச் சான்றிதழ் (Birth certificate) முதன்மை ஆவணமாக எடுத்துக்கொள்ளப்பட இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்பு பதிவேட்டில் பெற்றோர்களின் ஆதார் என், மொபைல் எண், மின்னஞ்சல், மாநிலம், மாவட்டம், வசிப்பிடம் நகரமா அல்லது கிராமம், வார்டு எண் என்ன போன்ற முழு தகவல்களும் சேர்க்கப்படவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது..

எனினும், மாநில அரசுகளுக்கு இதுகுறித்து அறிவிக்கப்பட்டு அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே இது நடைமுறைக்கு வரும் என்றும், மாநில அரசு இதை ஏற்றபின் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory